×

கூடுதல் விலைக்கு விற்பதும் கொள்ளையே டாஸ்மாக் கடைகளில் நேரடி ஆய்வு செய்ய வேண்டி வரும்: நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: கூடுதல் விலைக்கு மது விற்பதும் கொள்ளையே என தெரிவித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், கடைகளில் நீதிபதிகளே நேரடி ஆய்வு செய்யவேண்டி வரும் என எச்சரித்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ்வரி ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தமிழக அரசுக்கு மாதந்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. தமிழக அரசின் முதுகெலும்பாகவே டாஸ்மாக் வருமானம் உள்ளது. ஆனால், விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுப்பதில்லை. ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 வரை கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது. போலி மதுபானங்களும் விற்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு வழக்கில் டாஸ்மாக்கில் ரசீது வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை யாரும் பின்பற்றுவதில்லை. எனவே, 2010 முதல் நடந்த விற்பனை விபரம், வருமானம், மது ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், நிர்ணய விலைக்கு விற்கவும், போலி மதுபான விற்பனையை தடுத்து, ரசீது வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் ஹேமராஜ் ஆஜராகி, ‘‘மதுபான விற்பனை அரசுக்கு பிரதான வருவாயாக இருப்பதால் தான் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘மது விற்பனை என்பதும் ஒரு வகையான கொள்ளையே. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்தே, மதுபானம் வாங்கப்படுகிறது. இதில், கூடுதல் விலைக்கு விற்பது என்பதும் ஒரு வகையான கொள்ளையே. இந்த நிலை தொடர்ந்தால், நீதிபதிகளே கடைகளில் நேரடி ஆய்வு செய்யவேண்டிய நிலை ஏற்படும்’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘‘மதுபானங்களின் விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது? கூடுதல் விலைக்கு விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது? அவற்றின் விபரம் மற்றும் அவை எங்குள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மது விற்பனை, செலவினம் மற்றும் லாபம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன.7க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Judges ,inspection ,stores ,Tasmac , Selling at extra cost and looting will require direct inspection of Tasmac stores: Judges warn
× RELATED மெரினா கடற்கரையில் அதிக கலர்...