×

தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தால் 437.70 கோடி நஷ்டம்: விஸ்ட்ரான் கம்பெனி போலீசில் புகார்

கோலார்: தொழிலாளர்கள்  நடத்திய போராட்டம் காரணமாக விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு 436.70 கோடி  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கம்பெனி சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார்  கொடுக்கப்பட்டுள்ளது. கோலார் மாவட்டம், வேம்கல் தொழில்பேட்டையில் இயங்கி  வரும் விஸ்ட்ரான் இன்போகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில்  பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு  செய்ததால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்  போராட்டம் நடத்தினர். அப்போது தொழிலாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில்  தொழிற்சாலைக்கு 437.70 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ்  எஸ்பியிடம் தொழிற்சாலை முதன்மை நிர்வாக அதிகாரி டி.டி.பிரசாந்த், இணை  மேலாளர் மாலினி ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர். அதில் மொபைல் போன், உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் அலுவலக கருவிகள் சேதப்படுத்தியதில் 412.5 கோடியும், கட்டிட சேதத்திற்கு ₹10 கோடியும், வாகனங்களை தாக்கியதில் 60 லட்சமும், 1.5கோடி மதிப்பிலான செல்போன்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் விஸ்ட்ரான்  தொழிற்சாலையில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை  கொடுக்கும்படி மாவட்ட தொழிலாளர் நல அதிகாரி காந்த் பி.பாட்டீலுக்கு மாவட்ட  கலெக்டர் சத்தியபாமா உத்தரவிட்டிருந்தார். அதையேற்று விசாரணை நடத்தி  கலெக்டரிடம் கொடுத்துள்ள முதல் கட்ட அறிக்கையில், விஸ்ட்ரான்  தொழிற்சாலையில் 6 தனியார் ஏஜென்சிகள் மூலம் 8,490 தொழிலாளர்கள் பணியாற்றி  வருகிறார்கள். இதில் 1,343 தொழிலாளர்கள் மட்டும்  நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில்  பணியாற்றி வருகிறார்கள். இதில் தனியார் ஏஜென்சிகள், அவர்கள்  கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சரியானபடி ஊதியம்  வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்ததே போராட்டத்திற்கு காரணமாகும்.

ஊதிய  வழங்கல் சட்டம்-1936-ன் படி சரியான நேரத்தில் ஊதியம் வழங்காமல் இருப்பது  தொடர்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையில் போராட்டம் தொடர்பாக நேரில் ஆஜராகும்படி விஸ்ட்ரான் கம்பெனி  நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு மாநில தொழிலாளர் நலத்துறை  ஆணையர் அக்ரம்பாஷா நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து நேற்று பெங்களூரு வந்து  இரு தரப்பினரும் விளக்கம் கொடுத்து சென்றுள்ளனர். இதனிடையே போராட்டம் தொடர்பாக இதுவரை 149 பேர் கைதாகியுள்ளனர்.



Tags : strike ,Wistron Company , 437.70 crore loss due to workers' strike: Wistron Company complains to police
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!