வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்; இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி: தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது

வெலிங்டன்: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் நடந்து வந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்கில் 460 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோலஸ் 174 ரன், வாக்னர் 66 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் , அல்சரி ஜோசப் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய வெ.இண்டீஸ் 56.4 ஓவரில் 131 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் ஆனது. நியூசிலாந்து தரப்பில் சவுத்தி, ஜேமீசன் தலா 5 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 329 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை வெ.இண்டீஸ் ஆடியது.

நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழந்து 244ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 60, ஜோஷ்வா டிசில்வா 25 ரன்னில் களத்தில் இருந்தனர். 4வது நாளான இன்று மேற்கொண்டு ஒரு ரன் அடித்த ஹோல்டர் 81 ரன்னில் சவுத்தி பந்தில் போல்டானார். அரைசதம் அடித்த ஜோஷ்வா டி சில்வா 57 ரன்னிலும், அல்சரி ஜோசப் 24, கேப்ரியல் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். 79.1 ஓவரில் 317 ரன்னுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்து தரப்பில் போல்ட், வாக்னர் தலா 3, சவுத்தி, ஜேமீசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

நிக்கோலஸ் ஆட்டநாயகன் விருதும், ஜேமீசன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். முதல் டெஸ்ட்டில்  134 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த  நியூசிலாந்து 2-0 என தொடரை  கைப்பற்றியது. மேலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நியூசிலாந்து முன்னேறியது.

Related Stories:

>