×

8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா, பெசன்ட்நகர் பீச்சில் பொதுமக்கள் அனுமதி: உடற்பயிற்சி செய்வோர் காலையில் குவிந்தனர்; போலீசார் கண்காணிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் 8 மாதங்களுக்கு பிறகு இன்று காலையில் திறக்கப்பட்டு  பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் காலையில் மெரினா  பீச்சில் குவிந்தனர். அரசு  விதிமுறைகளை பின்பற்ற போலீசார் அவர்களை அறிவுறுத்தினர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முழு  ஊரடங்கு  அமலில் இருந்ததால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதே வெகுவாக குறைந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக  சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரைக்கு செல்ல கடந்த மாதம் முதல் பொதுமக்களுக்கு தடை  விதிக்கப்பட்டது.

 இதனால் பொதுமக்கள், காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு  செல்ல முடியாத நிலை உருவானது. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகளை  அறிவித்த தமிழக அரசு,  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா  கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது  திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

  இதை தொடர்ந்து, டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி  அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு மெரினா  கடற்கரைக்கு செல்ல இன்று முதல்  அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல மாதங்கள் கழித்து மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அவற்றை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில்   நடைபெற்றது. மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.  கடற்கரையில் உள்ள பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

 இதேபோன்று இன்று காலை பெசன்ட் நகர் கடற்கரைக்குள் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை இந்த  இரண்டு கடற்கரைகளும் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் அதிகாலை முதலே குவிந்தனர். அவர்கள்  அனைவரும் உற்சாகமாக  உடற்பயிற்சிகளில் ஈடுபட்டனர். மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும், முகக்கவசம்  அணிவது, சமூக  இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை  மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு  அறிவுறுத்தியுள்ளது. இந்த தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி  எச்சரித்துள்ளது.

இதையடுத்து, இன்று காலை முதல் போலீசார் மெரினா கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். சமூக  இடைவெளி, முககவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் கடற்கரை பரப்புக்குள் செல்பவர்களை போலீசார் பிடித்து  எச்சரித்து  அனுப்பினர். மேலும் குதிரைப்படை போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் இன்று காலை உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள் கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களாக, நடைமேடையில்   இடநெருக்கடியுடன் நடைப் பயிற்சி மேற்கொண்டோம். இனி வழக்கம் போல் சுதந்திரமாக பயிற்சி மேற்கொள்ள இருப்பது மகிவும் மகிழ்ச்சி  அளிக்கிறது. கொரோனா பரவல் இன்னும் தொடர்வதால், அரசு விதிமுறைகளை இங்கு வருபவர்கள்  முறையாக கடைபிடிக்க வேண்டும்.  அவ்வாறு செய்யாதவர்களை போலீசார் பிடித்து வெளியேற்றினால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என நம்புகிறோம்’’ என்றனர்.


Tags : Gymnasts ,Besantnagar Beach ,Chennai Marina , Public admission at Besantnagar Beach, Chennai Marina after 8 months: Gymnasts gathered in the morning; Police surveillance
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்