பாப்பாக்குடி அருகே கோயில் விழாவில் பயங்கரம்; வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: ஊர்நாட்டாண்மை உள்பட மேலும் 2 பேருக்கு வெட்டு

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியை அடுத்த ரங்கசமுத்திரம், நத்தம் காலனி பகுதியில் முப்பிடாதியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்டது. இக்கோயிலில் நேற்றிரவு சூரை விட்டுக் கொடுக்கும் விழா நடந்தது. அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பாடகலிங்கம் மகன் இசக்கிராஜா (20), மற்றொரு  இசக்கிராஜா மகன் ஆனந்தகுமார் (17) மற்றும் பெருமாள் மகன் சங்கரநாராயணன் (25) ஆகிய 3 பேர் மது குடித்து விட்டு வந்திருந்தனர். சூரை விட்டுக் கொடுக்கும் விழாவுக்கான பூஜை நடைபெறும் வேளையில் அவர்கள் 3 பேரும் தகராறு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலில் கூடியிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். தகராறு செய்த 3 வாலிபர்களையும் பூஜைக்கு தலைமை வகித்த ஊர் நாட்டாமை பாபநாசம் (65) தட்டிக் கேட்டார். அப்போது இசக்கிராஜா, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாபநாசத்தை வெட்டினார். இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஜெய்கணேஷ் (25) என்பவர் இசக்கிராஜாவிடமிருந்து அரிவாளை பிடுங்க முயன்றார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் விடாப்பிடியாக அவரிடமிருந்து அரிவாளை பிடுங்கிய ஜெய்கணேஷ், இசக்கிராஜாவை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவர், ரத்த வெள்ளத்தில்  மயங்கி சரிந்து கீழே விழுந்தார். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த பாபநாசம், இசக்கிராஜா ஆகியோரை கோயிலில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், லேசான காயம் அடைந்த ஜெய்கணேசை அம்பை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இசக்கிராஜா இன்று காலை இறந்தார். பாபநாசத்திற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெய்கணேசை போலீசார் கைது செய்ய உள்ளனர். கொலை செய்யப்பட்ட இசக்கிராஜா மீது கடந்த அக்.14ம்தேதி வெடிமருந்தை பதுக்கி வைத்ததாக அம்பை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோயில் விழா தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>