×

மரக்காணத்தில் இன்று காலை பரபரப்பு; முகம் சிதைந்த நிலையில் ஆசிரியர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

மரக்காணம்: மரக்காணத்தில் இன்று காலை முகம் சிதைந்த நிலையில் ஆசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சால்ட் ரோட்டில் இன்று காலை சுமார் 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவர் அருகில் ஒரு மோட்டார் பைக் இருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த கிடந்த நபரின் உடலை பார்வையிட்டபோது, முகம் சிதைந்து, தலை, கை, கால்களில் பலத்த காயம் இருந்தது. அவரது மோட்டார் பைக்கும் பலத்த சேதமடைந்திருந்தது.

முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர் யார்? என்பது குறித்து உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அருகில் கிடந்த செல்போனை எடுத்து, அதில் இருந்த எண்களில் போலீசார் தொடர்பு கொண்டபோது, இறந்த கிடந்த நபர் மரக்காணம் மேட்டு தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் மாதவன் (36) என்பது தெரியவந்தது. இவர் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முகம் சிதைந்து தலையில் அடிப்பட்டு கிடந்ததால், மோட்டார் பைக்கில் வந்தபோது, கீழே தவறி விழுந்து அடிப்பட்டு இறந்தாரா?

அல்லது பைக் மீது வேறு ஏதாவது வாகனம் மோதியதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். முகம் சிதைந்த நிலையில் ஆசிரியர் இறந்து கிடந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : death ,woods ,teacher ,Police investigation , The excitement this morning in the woods; Mysterious death of teacher with disfigured face: Police investigation
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்