×

8 மாதங்களுக்குப் பிறகு பவானிசாகர் அணை பூங்கா திறப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள அணை முன் 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இங்கு படகு இல்லம், சிறுவர் ரயில், கொலம்பஸ், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகர் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாத்தலங்கள் தற்போது திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு கலெக்டர் கதிரவன், விதிமுறைகளுக்கு உட்பட்டு 14ம் தேதி முதல் பவானிசாகர் அணை பூங்காவை திறக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூங்காவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை பூங்கா திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டு கைகழுவி விட்டு பூங்காவிற்குள் நுழையுமாறு பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது. பூங்கா நுழைவு வாயிலில் நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விதிமுறைகள் குறித்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பூங்கா திறக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு பூங்காவிற்கு சென்றனர். மதியம் மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Bhavani Sagar Dam Park , Bhavani Sagar Dam Park opens after 8 months
× RELATED பவானிசாகர் அணை பூங்கா அருகே இரும்பு...