×

செல்போனில் மூழ்குவதால் குடும்ப உறவில் விரிசல்!: மன அழுத்தம், உடல்ரீதியான பாதிப்புகளும் அதிகம்.. ஆய்வில் தகவல்..!!

சென்னை: இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு செல்போன் பயன்படுத்தும் பழக்கம் 7 மணி நேரமாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்பத்துடன் செலவு செய்யும் நேரத்தை விட செல்போனில் கூடுதல் நேரம் செலவிடுவதால் குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படுவதுடன் உடல் பாதிப்புகளும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி இதர பயன்பாடுகளுக்கும் பயன்படுவதால் நவீன வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் உருவான போது செல்போன்கள் மட்டுமே துணையாக மாறின. இந்நிலையில் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துதல் எப்படி மாறியுள்ளது என்பது குறித்து பிரபல செல்போன் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில், பல புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாதத்திற்கு முன்பு நாளொன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்தி வந்த இந்தியர்கள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வீட்டில் இருந்த போது சராசரியாக நாளொன்றுக்கு ஐந்தரை மணி நேரம் செல்போன் பார்த்தது வெளிவந்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு செல்போன் பயன்படுத்தும் நேரம் மேலும் 25 சதவீதம் அதிகரித்து 6.9 மணி நேரத்தை எட்டியுள்ளது. அதிகமானோர் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலை ஏற்பட்டதே இதற்கு ஒரு காரணம் என்றாலும், அடிக்கடி பேசுவதும், ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதும் இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மட்டும் 54 சதவீதம் பேர் தங்களுடைய நேரத்தை செலவிட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. செல்போன்கள் அடிமைத்தனத்தை உருவாக்கி பலரது நேரத்தை வீணடித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஆய்வு நிறுவனம்,இதனால் 84 சதவீதம் பேர் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை தங்களது செல்போன்களை பார்த்தபடி இருப்பதாக கூறியுள்ளது. செல்போன் பயன்பாட்டை குறைத்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Cell phone, cracks in family relationship, stress
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை