×

எங்கயா எய்ம்ஸ்? கண்டுபிடித்தால் சன்மானம்.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

மதுரை: பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்தால் பரிசுத்தொகை என மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு நிலவியது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இந்திய சுகாதார கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சி குழு தலைவராக இருந்தவர் ஜோசப் போர். ஆங்கிலேயரான இவர், எதிர்கால இந்திய மக்கள் நலனுக்காக இந்தியாவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் பரிந்துரைத்தார்.

இதன் தொடர்ச்சியாக அப்போதைய பிரதமர் நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோர், அதனை நிறைவேற்ற திட்டமிட்டனர் இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து நாட்டு நிதி உதவியுடன் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை 1952ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1956ல் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இம்மருத்துவமனை முதன் முதலில் துவங்கப்பட்டது. 9 மாநிலங்களில்...: இந்தியாவில் மத்தியபிரதேசம், ஒடிசா, பீகார், ராஜஸ்தான், சட்டீஸ்கர், உத்திரகாண்ட், உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் கடந்த 2012ம் ஆண்டும், 2018ல் மகாராஷ்டிரா, ஆந்திராவிலும், 2019ல் உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, பீகார், அசாம், குஜராத் உள்ளிட்ட 9 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ரூ.1,264 கோடி மதிப்பீடு: தமிழகத்தில் மதுரையை அடுத்த தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1264 கோடி செலவில் ‘எய்ம்ஸ்’ அமைக்கப்படும் என 2018ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கு 2019ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.5 கோடி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2020ம் ஆண்டு ஜனவரியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் நடுவே கொரோனா வந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த வேகத்தில் பணிகள் நடைபெற்றால் மதுரை எய்ம்ஸ் வெறும் கனவாக போய்விடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்தால் பரிசுத்தொகை என மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு நிலவியது. எங்கய்யா எய்ம்ஸ்? என்ற வாசகத்துடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட அடிக்கல்நாட்டு விழாவின் புகைப்படத்துடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மதுரையின் பல்வேறு இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.


Tags : Ames ,Madurai , Where are Ames? Reward if found .. Stir by the poster pasted in Madurai
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...