×

9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறப்பு...!! நாளை முதல் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணிகள் குதூகலம்

தென்காசி: 9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.  நாளை முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள், வணிக வளாகங்கள் என ஒவ்வொன்றாக திறக்க அனுமதி அளித்து வந்த அரசு, கடற்கரைகளுக்கும் அனுமதி வழங்கி விட்டது.

அதன் படி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா, நீலாங்கரை, மகாபலிபுரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், குற்றால அருவியில் மக்கள் குளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றுக்கு செல்லலாம். ஒரே நேரத்தில் எத்தனை பேர் சென்றாலும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். 2 மீ சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும்.  அருவிகள் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் கடற்கரையில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது குற்றாலத்திலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Courtallam Falls , Courtallam Falls opens after 9 months ... !! Permission to bathe from tomorrow; Tourists are excited
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...