×

இந்தியாவை மாற்றும் டாப் 50 இந்தியர்களில் இந்தப் பெண்ணும் ஒருவர்!

நன்றி குங்குமம்

புகைப்படத்தில் புன்னகைப்பவருக்கும் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்துக்கும் தொடர்பிருக்கிறது!
மட்டுமல்ல. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படத்துக்கும் இவருக்கும் கூட சம்பந்தமிருக்கிறது.ஆனால், இவர் தமிழரல்ல!

பெயர் குனித் மோங்கா. ‘விசாரணை’யின் நிர்வாகத் தயாரிப்பாளர். ‘சூரரைப் போற்று’வின் இணை தயாரிப்பாளர். இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் வலது கை. என்றாலும் இவர் பணக்காரர் அல்ல. பக்கத்து வீட்டில் இருந்து கடன் வாங்கி மும்பைக்கு வந்தவர்.அப்படிப்பட்ட இந்த குனித் மோங்காவைத்தான் -‘உலகளவில் பொழுதுபோக்குத் துறையில் சாதித்த 12 பெண்களில் ஒருவர்’ என ‘த ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ பத்திரிகை பாராட்டியிருக்கிறது; ‘இந்தியாவை மாற்றிய டாப் 50 இந்தியர்களில் ஒருவர்’ என ‘இந்தியா டுடே’ உச்சி முகர்ந்திருக்கிறது.

அனைத்துக்கும் சிகரம், ஆஸ்கர் விருதை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸின் தயாரிப்பு பிரிவில் இடம்பிடித்த இந்தியத் தயாரிப்பாளர் இவர்தான்; இந்திய சினிமாவையும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களையும் இணைக்கும் பாலமும் சாட்சாத் இவரேதான்!யார் இந்த குனித் மோங்கா..?தில்லியில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த குனித் மோங்கா, சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல் கொண்டவர். 16 வயதில் மொத்த குடும்பப் பொறுப்பு களையும் ஏற்றவர். இதற்காக, கிடைத்த வேலைகளை எல்லாம் பார்த்தார்.

சர்வதேச திரைப்படத் தயாரிப்பு சம்பந்தமான வேலைகள் குனித் மோங்காவுக்கு அறிமுகமானது 18 வயதில். அறிமுகப்படுத்தியவர் இவரது தோழியின் அம்மாவான அனுரீட்டா சைகல். தன் எதிர்காலம் இனி இந்தத் திசையில்தான் என அந்த நொடியில் தீர்மானித்தார். அனுரீட்டா சைகலிடமே பயிற்சியும் பெற்றார்.விளைவு… மாஸ் கம்யூனிகேஷன் படித்துக் கொண்டிருக்கும் போதே தன் நண்பர்களுடன் மும்பை சென்று இந்தி திரைப்படங்கள் தயாரிக்க திட்டமிட்டார்! அதற்காகத் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் நயமாகப் பேசி சினிமா எடுப்பதற்காக ஒரு தொகையைப் பெற்று 2006ம் ஆண்டு மும்பை வந்தார்.

கையோடு ‘Speaking Tree Films’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, சிறுவர்களுடைய கிரிக்கெட் டீம் தொடர்பான ‘Say Salaam India’ என்ற திரைப்படத்தை 2007ம் ஆண்டு தயாரித்தார்.மிகச்சரியாக இந்த நேரத்தில்தான் உலகக் கோப்பையிலிருந்து இந்தியா துரதிருஷ்டவசமாக வெளியேறியது. இதனால் அப்படம் வெளியாகவில்லை.இதற்காக குனித் மோங்கா சோர்வடையவில்லை. தில்லி, பஞ்சாப்பில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தனித்தனியாக தன் படத்தை திரையிட்டார். எட்டே மாதங்களில் படத்துக்காக செலவழித்த மொத்தப் பணத்தையும் எடுத்தார்!

உற்சாகத்துடன் மீண்டும் மும்பை திரும்பியவர், ‘Sikhya Entertainment’ என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, 2008ல் வெளியான ‘Dasvidaniya’ திரைப்படத்துக்கு இணை தயாரிப்பாளரானார்.

இதேநேரத்தில் எதிர்பாராத விதமாக குனித் மோங்காவின் பெற்றோர் காலமாகினர். அந்த இழப்பிலிருந்து மீள முழுமையாக தயாரிப்புப் பணிகளில் இறங்கினார்.இக்கால கட்டத்தில்தான் அனுராக் காஷ்யப்பை சந்தித்தார். அந்த சந்திப்பு குனித் மோங்காவின் வாழ்க்கையையே மாற்றியது!

அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய அங்கமானபோது குனித் மோங்காவுக்கு வயது ஜஸ்ட் 25தான்! ‘Gangs of Wasseypur Part I & II’, ‘That Girl in Yellow Boots’, ‘Trishna’, ‘Shaitan’, ‘Michael’, ‘Aiyya’... என சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அனைத்துப் படங்களுக்கும் பின்னணியில் இருந்தவர் இதே குனித் மோங்காதான்!

அவ்வளவு ஏன்... ‘The Lunchbox’, ‘Monsoon Shootout’ படங்களின் தயாரிப்புப் பணிகள் கூட இவரேதான்! இன்றைய தேதியில் இந்தியில் மட்டுமல்ல... இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து மொழிகளைச் சேர்ந்த தரமான மாற்றுப் படங்களுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு வகையில் குனித் மோங்கா சம்பந்தப்பட்டிருக்கிறார்... சர்வதேச அளவில் அப்படங்களைக் கொண்டு சென்று விருதுகள் பெற வைக்கிறார்.சுருக்கமாகச் சொல்வதென்றால், மாற்று சினிமா என கொண்டாடப்படும் இந்தியப் படங்களின் எதிர்காலத் துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் குனித் மோங்கா!
                   
அன்னம் அரசு

Tags : Indians ,India , India, female
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...