19வது நாளாக மத்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சி... விவசாயிகளின் பட்டினிப் போராட்டத்தில் களமிறங்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி : டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு சந்திப்பில் விவசாய சங்கத் தலைவர்களின் பட்டினிப் போர் தொடங்கியது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், சட்டத்தை ரத்து செய்ய விரும்பாத மத்திய அரசு, திருத்தங்கள் செய்வதாக உறுதி அளிக்கிறது. இதனால், இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்,  விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று 19வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. டெல்லி போராட்ட களத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு சந்திப்பில் விவசாய சங்கத் தலைவர்களுடன் லட்சக்கணக்கான விவசாயிகள் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் மற்றொரு எல்லையில் உள்ள திக்ரி மற்றும் உத்தரப் பிரதேச டெல்லி எல்லையிலும் விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு 40 விவசாயிகளின் சங்கங்களின் அமைப்பினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.தூங்கிக் கொண்டு இருக்கும் மத்திய அரசை எழுப்பவே பட்டினி போராட்டம் நடைபெறுவதாக உழவர் சங்க பொது செயலர் ஹரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.  அதோடு, அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>