×

தமிழகத்தில் தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை!: விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமையினால் ஒரு குடும்பமே தூக்கிட்டு தற்கொலை..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கந்துவட்டி கொடுமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் மோகன் என்பவர் ஆசாரி வேலை செய்து வந்துள்ளார். இவர் ஒருவரிடம் வேலை சம்பந்தமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வருமானம் இழந்து தவித்த மோகன், கடனை திருப்பி தர முடியாமல் இருந்துள்ளார். இருப்பினும் கடன் அளித்தவர்கள் உடனடியாக திருப்பி தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மோகன், அவரது மனைவி விக்னேஷ்வரி மற்றும் நித்திஷ், சிவபாலன், ராஜஸ்ரீ ஆகிய 3 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஆசாரி மோகன், வெகுநேரம் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் சன்னல் வழியே பார்த்தபோது குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஊர் மக்கள் முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்துவட்டி கொடுமையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்று இனிமேலும் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : suicide ,Tamil Nadu ,Villupuram , Kanthuvatti cruelty, Villupuram, a family suicide
× RELATED கரும்பு விளைச்சல் பாதிப்பால் வெல்லம்...