×

மழை விட்டும் வடியாத வெள்ளநீர்: வெளியில் வரமுடியாமல் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீரூடன் சேர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  
காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் செல்லும் சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் எதிரில் எஸ்எம்ஜி நகர், சண்முகா நகர், மகாலட்சுமி நகர், ஸ்ரீவாரி நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுற்றுப் புறங்களில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் மழையால் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து குளம்போல தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு அதிகமாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.   

இப்பகுதியில் உள்ள இரட்டை கால்வாய் செல்லும் வழியில் உயரமாக சாலை அமைத்ததால் மழைநீர் தேங்கி நிற்பதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அரசு ஊழியர் ஒருவரின் அச்சுறுத்தலினால் அவசர அவசரமாக முறையாக மழைநீர் வெளியேற கல்வெட்டு அமைக்காமல் சாலை போட்டதால் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றது எனப் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு என்று முகக்கவசம் அணிய வற்புறுத்தும் அதேவேளையில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதை மாவட்ட நிர்வாகம் கவனிக்காதது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். 


Tags : public , Floodwaters from the rain: The public suffers from not being able to get outside
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு: எஸ்ஐடி விசாரணை கோரி வழக்கு