என் மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலை வெளிப்படுத்துவேன்: திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா அறிக்கை

சென்னை: என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஜெயலலிதா செய்த ஊழலை தோலுரித்து காட்டுவேன் என்று ஆ.ராசா கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, எம்.பி. வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கண்டனங்கள் குறித்து நான் முதல்வருக்கு எழுதிய திறந்த மடலில் உள்ள எந்த கருத்தையும், வார்த்தையையும் பொய் என்றோ, புனைவு என்றோ மெய்ப்பிக்க முடியாதவர் முதல்வர், தமிழக காவல்துறை மூலம் என் மீது வழக்கை தொடுத்துள்ளார். தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இவ்வழக்கின் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுமேயானால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கண்டன கருத்துக்களை விசாரணை நீதிமன்றத்திலேயே உண்மை என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்ற அந்த அடிப்படையில் இவ்வழக்கை வரவேற்று, முதல்வருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என்றோ, என் சட்டப்படியான வாதங்களை தடுக்கலாம் என்றோ, முதல்வர் நினைத்தால் அதைவிட அரசியல் அறியாமை ஏதும் இருக்க முடியாது. என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே  ஜெயலலிதா செய்த ஊழலையும், ஜெயலலிதாவை பின்தொடர்ந்து அவரை போலவே ஊழலில் திளைக்கும் முதல்வரையும், இந்த அரசையும் தோலுரித்து காட்டுவதோடு விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில், இப்போது ஊழலில் திளைக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும்  பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>