பணம் வாங்கி கொண்டு பதவி தருவதாக கூறி அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கட்சி தலைமை அலுவலகம் முற்றுகை: மாவட்ட செயலாளர் மீது கட்சி நிர்வாகிகள் சரமாரி புகார்

சென்னை: பணம் வாங்கி கொண்டு பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவதாக கூறி, அதிமுக தலைமை அலுவலகத்தை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் ராயப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக தென்சென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் 6 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிதாக வட்ட, பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், பலரிடம் பணம் வாங்கி கொண்டு நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக வேளச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் நியமிக்கப்பட்டார். இவர், தனது மாவட்டத்தில் பகுதி, வட்ட செயலாளர் பதவிக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அண்மையில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும், மாவட்ட செயலாளர் தனது உறவினர்களுக்கும் பதவி தந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வேளச்சேரி தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, அவர்கள் பல ஆண்டுகளாக கட்சியில் உழைத்தவர்களுக்கு பொறுப்பு வழங்காமல், அண்மையில் கட்சியில் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவில் கடுமையாக உழைத்தால் நிச்சயம் பதவி கிடைக்கும். ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. அதிமுகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பதவி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது, பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு பகுதி செயலாளர், வட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தோம்.

ஆனால், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் பணம் பெற்றுக்கொண்டும், அண்மையில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பகுதி செயலாளர், வட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது, எங்களை போன்று 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்கு உழைத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக காத்திருந்த எங்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையாக உழைக்கு தொண்டர்களுக்கு இனி பதவி கிடைக்காதோ என்று எங்களுக்கு எண்ணத் தோன்றுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியில் உள்ள உண்மை தொண்டர்களை புறக்கணித்து விட்டு, அதிமுக பொறுப்பாளர்களை வைத்துக்கொண்டு மட்டும் தேர்தலை கட்சி எப்படி சந்திக்க முடியும். இந்த விவகாரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலையிட்டு கட்சிக்கு உழைத்த தொண்டர்களுக்கு பதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>