×

ஓமனில் இருந்து குமரிக்கு 2,700 கி.மீ தூரம் விசைப்படகில் தப்பி வந்த மீனவர்கள்: 4 மாதமாக சம்பளம் தரவில்லை என புகார்

குளச்சல்: ஓமனில் இருந்து, விசைப்படகில் சுமார் 2700 கி.மீ. தூரம் பயணித்து குமரி  வந்த மீனவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சகாய ததேயூஸ் (46), ஸ்டீபன் (52), அல்டோ (28), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58), வங்காள தேசம் நாட்டை சேர்ந்த முகமது ரஜிப் ஓடீன் (27) ஆகியோர் ஓமன் நாட்டை சேர்ந்த அப்துல்லா என்பவரது விசைப்படகில் கடந்த 14 மாதங்களாக மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களாக இந்த மீனவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பலமுறை முறையிட்டும் ஊதியம் வழங்காததால் குமரி மாவட்ட மீனவர்கள் இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா, அவர்களை தாக்கி உள்ளார்.  இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இனி இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என பயந்து, 5 பேரும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அவர்களுடன், வங்காளதேசத்தை சேர்ந்தவரும் வர சம்மதித்தார்.

பாஸ்போர்ட்டை அப்துல்லா பறித்துக் ெகாண்டதால், அவரது விசைப்படகிலேயே கடந்த 8 நாட்களுக்கு முன் மீன் பிடிக்க செல்வது போல் கிளம்பிய மீனவர்கள் அங்கிருந்து இந்தியா புறப்பட்டனர். நேற்று அதிகாலை  குமரி மாவட்டம் முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தனர்.  ஓமன் விசைப்படகில் மீனவர்கள் வந்திறங்கிய தகவல் அறிந்ததும், குமரி கடலோர குழும காவல் நிலைய போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பளம் தராமல் தாக்கி கொடுமைப்படுத்தியதை தொடர்ந்து தப்பி வந்ததாக கூறினர். இது பற்றி மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மீனவர்கள் சுமார் 2,747 கி.மீ. தூரம் கடல் வழியாக குமரி மாவட்டம் வந்துள்ளனர்.

6 பேரும் கைது
மரைன் போலீசார் மீனவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், ஆவணங்கள் இன்றியும், அனுமதியின்றியும் ஊருக்கு வந்ததாக வழக்கு பதிந்து 6 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம்  மத்திய உளவுத்துறை போலீசாரும் விசாரணை நடத்தினர்.


Tags : Fishermen ,Oman ,Kumari , Fishermen flee 2,700 km from Oman to Kumari by boat: Complaint of non-payment for 4 months
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி