×

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது வெஸ்ட் இண்டீஸ்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச... நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்து ஆல் அவுட்டானது (114 ஓவர்). ஹென்றி நிக்கோல்ஸ் அதிகபட்சமாக 174 ரன் விளாசினார். வில் யங் 43, டேரில் மிட்செல் 42, நீல் வேக்னர் ஆட்டமிழக்காமல் 66 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல், ஜோசப் தலா 3 விக்கெட், சேஸ், அறிமுக வீரர் கெமார் ஹோல்டர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து  முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. ஜெர்மைன் பிளாக்வுட் 69 ரன், கேம்ப்பெல், புரூக்ஸ் தலா 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். மூன்றாம் நாளான நேற்று அந்த அணி மேற்கொண்டு 7 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. கெமார் ஹோல்டர் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசி. பந்துவீச்சில் கைல் ஜேமிசன், டிம் சவுத்தீ தலா 5 விக்கெட் அள்ளினர். இதையடுத்து, 329 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 3ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்துள்ளது. கிரெய்க் பிராத்வெய்ட் 24, ஜான் கேம்ப்பெல் 68, ஷம்ரா புரூக்ஸ் 36, பிளாக்வுட் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். டேரன் பிராவோ 4 ரன் எடுக்க, ரோஸ்டன் சேஸ் டக் அவுட்டானார்.
கேப்டன் ஜேசன் ஹோல்டர் 60 ரன் (89 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோஷுவா டா சில்வா 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் போல்ட் 3, ஜேமிசன் 2, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 85 ரன் தேவை என்ற நெருக்கடியுடன் வெஸ்ட் இண்டீஸ் இன்று 4ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.



Tags : West Indies , West Indies struggle to avoid innings defeat
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...