8 மாதங்களுக்கு பிறகு மெரினா பீச் செல்ல இன்று முதல் அனுமதி

சென்னை: மெரினா கடற்கரைக்கு 8 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் செல்ல இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிதல், தனி மனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதன்படி சென்னையில் உள்ள மெரினா மார்ச் 21ம் தேதி மூடப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.  இந்நிலையில் மெரினா கடற்கரை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இதை தொடர்ந்து மெரினா கடற்கரை வரும் 14ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதன்படி மெரினா கடற்கரை இன்று திறக்கப்படவுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள், மாஸ்க் அணியாமல் இருப்பது, தனிமனித இடைவெளி பின்பற்றாமல் நடப்பது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: மெரினா கடற்கரையில் அனைத்து வாயில்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். எந்த வித தடையும் இருக்காது. ஆனால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும். தமிழக அரசு விதிமுறைகளின்படி மாஸ்க் அணியாதவர்களுக்கு ₹200 அபராதம் விதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அதற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படும். அவர்களும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை கண்காணிக்க, மாநகராட்சி, காவல்துறை, வருவாய்  துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் அடங்கிய குழு  அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினார். மாமல்லபுரத்தை பார்வையிடவும் அனுமதி கொரோனா தொற்று காரணமாக மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ளன. மார்ச் 16 ந் தேதி முதல் மத்திய தொல்லியல் துறை உத்தரவின் பேரில் மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால், 8 மாதங்களாக மூடியே இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 30ந் தேதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத் தலங்களை திறந்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.  இந்நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று (திங்கள்கிழமை) முதல் வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதி உள்ளது.  மேலும், கட்டண கவுண்டர்களில் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்க முடியாது என்றும், ஆன்லைன் மூலமே பதிவு செய்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். அப்படி பதிவு செய்யாது வருபவர்கள் நேரில் வந்து போன் பே, கூகுள் பே, பேடிஎம் ஆப் மூலம் செல்போனில் பார்கோடு ஸ்கேன் செய்து, அவற்றின் மூலம் பணம் செலுத்தி புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்கலாம்.

Related Stories:

>