முதல்வர் பதவி இரண்டரை ஆண்டு விவகாரம்; காங். தலைமை சொன்னால் ராஜினாமா செய்வேன்: சட்டீஸ்கர் முதல்வர் திடீர் அறிவிப்பு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் ஆட்சி இரண்டரை ஆண்டு முடிவை ெநருங்கி வரும் நிலையில், அவரது காலம் முடிந்து விட்டதாகவும், மற்றொரு காங். மூத்த தலைவர் அடுத்த முதல்வராக அறிவிக்கப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்ததால், அப்போதைய மாநிலத் தலைவர் பூபேஷ் பாகேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். அப்போது மூத்த அமைச்சர்களாக டி.எஸ்.சிங்தேவ், தம்ரத்வாஜ் சாஹு ஆகியோரும் பதவியேற்றனர்.

முன்னதாக, கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில் பூபேஷ் பாகேல் முதல் இரண்டரை ஆண்டும், டி.கே.சிங்தேவ் அடுத்த இரண்டரை ஆண்டும் முதல்வராக பதவியில் அமர்த்தப்படுவர் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இப்போது பூபேஷ் பாகேல் தலைமையிலான ஆட்சி இரண்டரை ஆண்டுகளை முடிக்கும் நிலையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், கட்சி தலைமை அறிவுறுத்தல்படி சட்டீஸ்கருக்கு அடுத்த முதல்வர் தேர்வு இருக்குமா? என்ற விவாதம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சுர்குஜா பகுதியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் நிருபர்களிடம் கூறுகையில், ‘கட்சித் தலைமை என்னை ராஜிநாமா செய்யச் ெசான்னால் நான் எனது பதவியை ராஜிநாமா செய்வேன்.

கட்சித் தலைமை கூறியதின் அடிப்படையில் முதல்வர் பொறுப்பை ஏற்றேன். அதனால் தலைமை சொன்னால் உடனடியாக  ராஜிநாமா செய்வேன். இந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு வழங்கப்பட்ட பணியை செய்து வருகிறேன். தவறான புரிதல்களை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன’ என்றார். இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சரான டி.எஸ்.சிங்தேவிடம் கேட்டபோது, ‘கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம். நாங்கள் இதைப் பற்றி பகிரங்கமாக பேசமாட்டோம். இரண்டரை ஆண்டு பதவிக்காலம் என்பது குறித்து, கட்சித் தலைமை முடிவு செய்யும்’ என்றார்.

இதற்கிடையே முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகனும், ஜனதா காங்கிரஸ் மாநிலத் தலைவருமான அமித் ஜோகி இவ்விவகாரம் குறித்து கூறுகையில், ‘முதல்வர் பூபேஷ் பாகேல், தற்போது இவ்வாறு பேசுவதற்கான காரணம் என்ன? அவ்வாறு ஏதேனும் இரண்டரை ஆண்டு திட்டம் அரசிடம் இருந்தால், அதனை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். டெல்லியின் உத்தரவின் பேரில் ஒரு நிமிடத்தில் ராஜிநாமா செய்வேன் என்று முதல்வர் கூறியது அடிமை மனநிலையை குறிக்கிறது’ என்றார்.

Related Stories:

>