×

புரெவிக்கு பிறகு மீண்டும் களைகட்டிய கன்னியாகுமரி: தடை பகுதியில் செல்பி எடுத்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி: புரெவி புயலுக்கு பிறகு மீண்டும் கன்னியாகுமரி இன்று களைகட்டியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து செல்பி எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கொரோனா பரவல் காரணமாக சுமார் 9 மாதமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு எதிரொலியாக சுற்றுலா பயணிகள் வருவதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதோடு படகு சேவையும் நிறுத்தப்பட்டது. ஒருவழியாக புயல் ராமேஸ்வரம் வழி கரையை கடக்கவே தாக்குதலில் இருந்து குமரி மாவட்டம் தப்பியது. அதன் பிறகு மீண்டும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். இந்த நிலையில் ஞாயிற்றுகிழமையான இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். அதைத் தொடர்ந்து குடும்பத்துடன் கடற்கரையில் உள்ள காட்சி படித்துறையில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் கடலில் நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு பூம்புகார் படகு மூலம் சென்று விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும் கடற்கரையில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் ஆபத்தை உணராமல் கடலில் உள்ள மரணப்பாறைகளில் ஏறி செல்பி எடுத்தனர். இது தடை செய்யப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் கடற்கரையை சுற்றி உள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

இதனால் கடந்த சில வாரங்களாக வணிகமின்றி தவித்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் வெளி மாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகளையும் கன்னியாகுமரிக்குள் அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kanyakumari ,brewery ,area ,Selby , Kanyakumari weeding again after brewery: Excitement as Selby took over the restricted area
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?