×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்; 4 போட்டிகளிலும் இந்தியாவுக்கு சிக்கல்தான்: இங்கிலாந்து மாஜி கேப்டன் வாகன் பேட்டி

லண்டன்: ‘‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 4 போட்டிகளிலும் தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது’’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பின்னர், டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளன. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 17ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது.

இந்த தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது: அடிலெய்டு டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. பிங்க் கலர் பந்து பயன்படுத்தப்பட உள்ளது. அடிலெய்டில் பகலிரவு ஆட்டத்தில் இதுவரை ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததில்லை.இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், அடுத்து வரும் 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடையும். 0-4 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வியை இந்திய கிரிக்கெட் அணி பெறும். மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் என வலிமையான பவுலர்களை இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மென்கள் எதிர்கொண்டு ஆட வேண்டும்.

பிங்க் கலர் பந்தில் அவர்களது பவுலிங் மிரட்டலாக அமையும். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால், அடுத்து வரும் போட்டிகளிலும் தோல்வியடையும். ஏனெனில் அடுத்த 3 போட்டிகளிலும் விராட் கோஹ்லி ஆடப் போவதில்லை. கோஹ்லி இல்லாத இந்திய அணியை வெல்வது சுலபம். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வலிமையான டெஸ்ட் அணியாக இருந்தது. அப்போது பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தனர். தவிர பேட்டிங்கில் சடேஸ்வர் புஜாரா ஜொலித்தார். ஆனால் இப்போது இந்திய அணி, அந்த ஃபார்மில் இல்லை.

மாறாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் வலிமையான அணியாக மேம்பட்டு வருகிறது. டெஸ்ட் அணிக்கான கேப்டனாக, டிம் பெய்ன் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார். வார்னர், லபுசேன், ஸ்மித் என வலிமையான பேட்ஸ்மென்கள் உள்ளனர். எனவே இந்தியாவுக்கு சிக்கல்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Test series ,Vaughan ,matches ,Australia ,India ,interview ,England , Test series against Australia; Problem for India in 4 matches: Former England captain Vaughan interview
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி