×

தொடர் மழை எதிரொலி புல்லாவெளியில் `புல்லா’ கொட்டுது தண்ணீர்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் இதனைச் சுற்றியுள்ள மலைக்கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் விட்டுவிட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் பல இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக விழுந்து கொண்டிருக்கின்றது.

இதனால் குடகனாற்றில் அதிகளவில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அருவியாக கொட்டுகிறது. இந்த தண்ணீர் தான் திண்டுக்கலுக்கு குடிநீர் ஆதாரமான காமராஜர் நீர் தேக்கத்திற்கும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 22 ஊராட்சிகளுக்கும், ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கும் செல்கின்றது. நீர்வரத்து அதிகரிப்பால் இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் மாறுகால் பாய்ந்து வருகின்றன. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும்.

அருவியில் குளிப்பதற்காக சென்ற பலர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த அருவியில் குளிப்பதற்கு தடை உள்ளதால் சுற்றுலா பயணிகளை இந்த இடத்திற்கு போலீசார் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்த தடையை மீறி தற்போது இந்த அருவி பகுதியில் குளிப்பது, மது அருந்தி சமையல் செய்வது என அத்துமீறி செயல்படுகின்றனர். இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த பகுதியில் ஆற்றின் அருகாமையில் தீ மூட்டி சமையல் செய்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags : Echoes of continuous rain pouring water on the grass
× RELATED சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள...