×

50 அடி கால்வாய் ஆக்ரமிப்பு தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு 10 ஆண்டாக ஒரே பதில்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம்

நாகர்கோவில்: கடந்த 10 ஆண்டுகளாக ஆக்ரமிப்பு அகற்றுதல் சம்மந்தமாக தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுப்பற்ற முறையில் ஒரே விதமான பதிலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகள் முன்பு விவசாய நிலங்கள் மற்றும் குளங்களாக இருந்தவையாகும். இதில் ஏராளமான குளங்கள் கட்டிடங்களாக மாறிவிட்டன. பல குளங்கள் விதிமுறைகள் மீறி வணிக வளாகங்களாக மாற்றப்பட்டு விட்டன. இந்த குளங்கள் மற்றும் விளைநிலங்களுக்கு ஊட்டு கால்வாய்களாக இருந்தவை தற்போது, கழிவு நீரோடைகளாக மாறி விட்டன.

இதில் பெரும்பாலான கால்வாய்கள் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கி,  வீடுகள், கடைகளாக மாற்றப்பட்டு விட்டன. இதனால், மழைக்காலங்களில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து, மணிமேடை சந்திப்பு உள்பட நாகர்கோவில் மாநகரின் பல முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனினும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆக்ரமிப்புகளை கண்டு கொள்வதில்லை. மாநகராட்சி சார்பில் ஆணையர் சரவணக் குமார் நடவடிக்கை மேற்கொள்ள முயன்றபோது அரசியல் தலையீடு காரணமாக நடவடிக்கை தள்ளிப் போனது.

இதற்கிடையே ஈத்தாமொழி சாலையில் இருந்து பறக்கை சாலை வழியாக கன்னியாகுமரி சாலையை கடந்து பறக்கின்காலில் கலக்கும் கால்வாய் 60 அடியில் இருந்து 10 அடியாக சுருங்கி விட்டது. மீதமுள்ள 50 அடி  கால்வாய் வீடுகள், வணிக நிறுவனங்களால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பறக்கை சாலையில் உள்ள பாலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி மழை நீருடன் கழிவுநீரும் கலந்து 100 மீட்டர் தொலைவிற்கு சில அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் மேற்கண்ட இந்த சாலையில் ஆக்ரமிப்புகளை அகற்றுவதுடன், ஈத்தாமொழி சாலை, பறக்கை சாலை வழியாக கன்னியாகுமரி நெடுஞ்சாலை வரை புதிய இணைப்பு சாலை அமைக்க நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீ ராம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடந்த 2010ம் ஆண்டு மனு அனுப்பி இருந்தார். இதுபோல், இசங்கன்விளை திருச்செந்தூர் அன்னதான அறக்கட்டளை தலைவரும், வடலிவிளை கீழதெருவை சேர்ந்த பரமச்சந்திரன் என்பவரும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரப்பிரிவு மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பப்பட்டது.

ஆனாலும், நடவடிக்கை இல்லை. இதற்கிடையே பரமசந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2012ம் ஆண்டு உயர் நீதிமன்றமும் ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை. இது குறித்து, பரமசந்திரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் பொதுப்பணித்துறைக்கு தகவல் அறியும் சட்டம் மூலம் மேற்கண்ட ஆக்ரமிப்பு அகற்றுவது குறித்த தகவல்களை கேட்டபோது, குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லை. வருவாய்த்துறையிடம் ஆக்ரமிப்புகளை அளந்து தர கோரியுள்ளோம். அவர்கள் அளவீடு செய்ததும் ஆக்ரமிப்பு அகற்றப்படும் என்ற பதிலையே தந்துள்ளனர். தற்போது கேட்டபோதும் அதே பதிலையே தந்துள்ளனர்.அதிகாரிகள் பலர் மாறினாலும் பதில் மட்டும் மாறவில்லை. இந்நிலையில், தற்போது, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கும், முதல்வர் தனிப்பிரிவிற்கும் நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீராம் மீண்டும் ஆக்ரமிப்புகளை அகற்றவும், இணைப்பு சாலை அமைக்கவும், ஆக்ரமிப்பு செய்த பெரும் செல்வந்தர்களுக்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி புகார் மனு அனுப்பியுள்ளார்.

* கோயில் நிலத்தை விற்க முயற்சி
இடலாக்குடி ரஹமத் கார்டன் பகுதியில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சுமார் 16 ஏக்கர் நிலத்தில் சிலர் வீட்டுமனை பிரிவு போட முயன்றனர். இதுபற்றி புகார்கள் வந்ததையடுத்து, 2018ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அனுமதியின்றி  வீட்டு மனை விற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இங்கு மீண்டும் வீட்டுமனை விற்பனை செய்ய முயல்வதாக கூறப்படுகிறது. இதற்காக மின் வாரிய அதிகாரிகள் துணையுடன், அங்கு மின்கம்பங்களும் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Canal Aggression , 50 ft canal invasion The only answer to the Right to Information law question for 10 years: Public Works officials negligence
× RELATED கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது;...