60 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பு

கோவை: கோவைக்கு பெருமை சேர்க்கும் பல தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் தயாரிப்பு. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் கோலோச்சி வருகிறது இத்தொழில். 1950-ல் ஆண்டுகளில், மார்க்கெட்டில்  கிடைத்த பொருட்களை கொண்டு மிக எளிமையாக உருவாக்கப்பட்ட இத்தொழில், இன்று பெரும் விருட்சமாக விரிவடைந்துள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இட்லி, தோசை மாவு தேவைப்படும் உணவகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த கிரைண்டர்கள், மெல்ல மெல்ல வீட்டு சமையல் அறைகளில் இடம்பிடிக்க ஆரம்பித்தவுடன் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது, அத்தியாவசிய சமையலறை பொருளாக மாறிவிட்டது.

கன்வென்ஷனல் மாடல் என்ற ஆரம்ப வடிவமைப்பு, தற்போது மாற்றம் பெற்று  டில்டிங் என்ற சாய்வு வகை கிரைண்டர்களாக உருவெடுத்துள்ளன. இதை, பெண்கள் மற்றும் வயது  முதிர்ந்தவர்கள் கையாள்வது எளிது. மேலும், சமையல் அறையில் அதிகளவு இடத்தை ஆக்கிரமிக்காமல், அழகு ஊட்டும் வகையில் டேபிள் டாப் கிரைண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சாதாரண குடிசை வீடு முதல் அடுக்குமாடி குடியிருப்பு வரை இவ்வகை கிரைண்டர்கள் இடம்பிடித்தன.

கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம்வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்படுவதால், வேறு எங்கும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முறைசாரா தொழிலாக  தொடர்ந்து வந்த இத்தொழில், எளிய சாதாரண நபரையும் தொழில்முனைவோராக உருவாக்கியது.

நாளடைவில், தென்மாவட்டங்களில் சிற்ப வேலைகள் மற்றும் கோயில் வேலைகள் செய்து வந்த தொழிலாளர்கள், கோவைக்கு இடம்பெயர்ந்து, கிரைண்டர் கல் வடிவமைக்கும் தொழிலில் ஈடுபட துவங்கினர். இவர்களது வாழ்வாதாரம் உயர்ந்தது. இத்தொழிலில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் ஈடுபட்டுள்ளனர். கோவையின் அடையாளமாக உள்ள இந்த  வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் (geographical indication registry) வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் தொழில் வளர்ச்சி அமைப்பு (UnitedNations industrial development organisation) கிளஸ்டர் திட்டங்களுக்காக முதன் முதலில் இந்தியாவில் தேர்ந்தெடுத்தது இந்த தொழிலைத்தான்.

இத்தொழிலை நம்பி, கல்லுடைக்கும் தொழில், உதிரிபாகங்கள், மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள் என 650-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாக 10,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மறைமுகமாக 30  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெற்று வருகின்றனர். இதன்மூலம், 40 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. கோவையில் தயாரிக்கப்படும் வெட்கிரைண்டர்கள் இந்தியா மட்டுமின்றி, இலங்கை, மலேசியா,  சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் இலவச கிரைண்டர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, கோவையில் இருந்துதான் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தொழில் சமீப காலமாக படிப்படியாக நசிந்து வருகிறது. இதன்மீது விதித்திருந்த 14.5 சதவீத விற்பனை வரி, இத்தொழிலை, பெரிய வளர்ச்சி அடைய முடியாமல் முடக்கியது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்புவரை ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கிரைண்டர் தொழில் 2016-ம் ஆண்டு பெரும் சரிவை சந்தித்தது. அதாவது, பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, அதன்பிறகு அமலுக்கு வந்த 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவை இத்தொழிலை தலைகீழாக புரட்டிப்போட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டாலும், வீழ்ந்த இத்தொழில் இன்னும் எழுந்தபாடில்லை.

மூலப்பொருட்களுக்கு 18 சதவீதம் வரி, கிரைண்டர் விற்பனைக்கு 5 சதவீதம் வரி என உள்ளதால் இடைப்பட்ட 13 சதவீத வரித்தொகை என்பது உற்பத்தியாளர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 8 மாத காலமாக பெரிய ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள் சமுதாய கூடங்கள் இயங்கவில்லை. இதுவும், இத்தொழிலுக்கு பெருத்த நெருக்கடியை கொடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டு உபயோக கிரைண்டர் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 3 மாதமாக ஏபிஎஸ் பிளாஸ்டிக், எம்எஸ் ஆங்கிள், பைப்புகள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள், கம்பிகள் மற்றும் மோட்டார் உற்பத்திக்கு தேவையான ஸ்டாம்பிங், காப்பர் வயர்கள் போன்ற மூலப்பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது.

இந்த அபரிமிதமான விலையேற்றம் இத்தொழிலை அடியோடு முடக்கிப்போட்டுவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, வெறும் 30 சதவீத கிரைண்டர் உற்பத்தி மட்டுமே நடக்கிறது. இதுகுறித்து கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பாளர் சங்க தலைவர் சவுந்தரகுமார் கூறியதாவது: காரணமே அறியாமல் நாள்தோறும் உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலையேற்றம், மத்திய-மாநில அரசுகளின் வரி தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரிய அடி விழுந்துள்ளது. எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. எங்களிடம் கிரைண்டர் வாங்கி விற்கும் வியாபாரிகளும் விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால் இந்த தொழிலகங்களை முற்றிலும் மூடவேண்டிய நிலை ஏற்படும். இத்தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதிக்கு வந்துவிடும். ஒவ்வொரு தொழில்முனைவோரின் சுயமுயற்சியின் காரணமாகவும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் வளர்ந்த கிரைண்டர் தொழில், தற்போது அடுத்த தலைமுறையை நோக்கி நகர முடியாத நிைலயில் உள்ளது. பாரம்பரியமான இத்தொழில், அழிவின் விளிம்பை நோக்கி செல்கிறது. இத்தொழிலை காக்க, மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சவுந்தரகுமார் கூறினார்.

* ஒழுங்குமுறை ஆணையம்

மூலப்பொருள் விலைஏற்றத்தை தவிர்க்க, மத்திய அரசு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். சீரான மற்றும் நியாயமான விலை நிர்ணயம் செய்து, கண்காணிக்க வேண்டும். தற்போது, நாமக்கல்  பகுதிகளில் கல் கடைசல்  தொழிலகங்களை அரசு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுவும், இத்தொழிலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. எனவே, மாநில அரசு இதில் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும். இத்தொழிலை பாதுகாக்கும் வகையில், ‘’வெட்கிரைண்டர் தொழிற்பேட்டை’’ உருவாக்க வேண்டும்.

Related Stories:

>