×

கொரோனா ஊரடங்கு தளர்ந்தும் விழி பிதுங்கும் உரிமையாளர்கள்: சாலையோரங்களில் முடங்கி நிற்கும் லாரிகள்; கைகொடுத்து கரை சேர்க்குமா தமிழக அரசு?

நாமக்கல்: தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் லாரித்தொழிலுக்கு பெயர் பெற்ற நகரமாகும். நாமக்கல்லில் மட்டும் சுமார் 40 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி பாடி கட்டும் பட்டறைகள் மற்றும் லாரித்தொழில் சார்ந்த பட்டறைகள் உள்ளது. டீசல் விலை உயர்வு, சுங்ககட்டணம் உயர்வு, டயர்கள் விலையேற்றம், லாரி டிரைவர்கள் பற்றாக்குறை என லாரி உரிமையாளர்கள் கடந்த 10 ஆண்டாக இந்த பிரச்னையை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால், லாரிதொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த 4 மாதமாகியும் லாரித்தொழில் பழைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. கொரோனா ஊரடங்கால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பல பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டும் லாரிகளுக்கு போதுமான லோடுகள் கிடைப்பதில்லை. இதனால், நாமக்கல் பகுதியில் சுமார் 40 சதவீத லாரிகள், அதன் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் தோட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளுக்கு வரி செலுத்த முடியாமல், பர்மிட்டை நாமக்கல்லில் உள்ள 2 ஆர்டிஓ அலுவலங்களில் இந்த ஆண்டு சரண்டர் செய்துள்ளனர். ஊரடங்கால், லாரிகளுக்கு லோடுகள் கிடைக்காததால் காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் என லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், லாரி உரிமையாளர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், மாநில அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள், லாரிகளுக்கு தகுதிசான்று பெற குறிப்பிட்ட நிறுவனங்களின் வேக கட்டுபாட்டு கருவி, ஒளிரும் பட்டை (ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர்) ஒட்டவேண்டும் என புதிய உத்தரவுகளை பிறப்பித்து அமல்படுத்தி வருகின்றனர். இதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் கடந்த வாரம் மனு அளித்தும், போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவை வாபஸ் பெறவில்லை. இதனால், வேறு வழியின்றி வரும் 27ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என மாநில லாரி உரிமையளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

* தொழிலை நசுக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால், சரக்கு போக்குவரத்துக்கு முதுகெலும்பாக உள்ள லாரி தொழில் பாதிப்படைந்துள்ளது. கடந்த 2017, 2018, 2019ம் ஆண்டுகளில்  மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டங்களை தமிழக அரசு தற்போது செயல்படுத்த முயற்சிக்கிறது. நெருக்கடியான சூழலில் அரசு மேலும் நெருக்கடி கொடுப்பது கவலையளிக்கிறது. வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர், ஜி.பி.எஸ்., கருவியை பொருத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதால், விலை அதிகரிக்கிறது. தகுதிசான்று புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவாகிறது. வேக கட்டுப்பாட்டு கருவி தயாரிப்பில் தரச்சான்று பெற்ற 49 நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், போக்குவரத்து துறை அதிகாரிகள் 11 நிறுவனங்களின் தயாரிப்பு கருவியை பொருத்த வேண்டும் என்கிறார்கள்.

அந்த 11 நிறுவனங்களும் 7 தயாரிப்பாளர்கள் வசம் தான் இருக்கிறது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை உத்தரவு பெற்று 3 மாதமாகி விட்டது. நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு இதுவரை மதிக்கவில்லை.ஒளிரும் ஸ்டிக்கரும் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் தயாரிப்புகளை தான் வாங்கவேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள். இதற்கும் நீதிமன்றம் தடை உத்தரவு அளித்து பழைய முறை நீடிக்கலாம் என கூறிவிட்டது. ஆனால், இதையும் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. இப்படி லாரி உரிமையாளர்களை நசுக்கும் நடவடிக்கையை மாநில அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கூறியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இதனால், வரும் 27ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் அறிவித்துள்ளோம். கொரோனா பாதிப்பு, மாநில அரசின் புதுப்புது விதிமுறைகளால், லாரி உரிமையாளர்களால் தொழில் செய்ய முடியவில்லை. ஒரு லாரி வைத்து தொழில் செய்யும் உரிமையாளர்கள் தொழிலை விட்டு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு வாங்கிலி தெரிவித்தார்.

* அரசு அக்கறை காட்டவில்லை
தொழில் மேம்பாட்டு ஆர்வலர் ரவிசந்திரன் கூறியதாவது: கொரோனா பாதிப்புக்கு முன்பிருந்தே மோட்டார் தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தது. மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் உயர்வு, டீசல் விலை ஏற்றம், சுங்கச்சாவடி கட்டண உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மோட்டார் தொழிலை நடத்த முடியாத நிலையில் வாகன உரிமையாளர்கள் இருந்து வந்தனர்.கொரோனா பாதிப்புக்கு பின்பு சுங்கச்சாவடி உயர்வு, கச்சா எண்ணெய் விலை குறைந்தும் தொடர் டீசல் விலை ஏற்றம் மற்றும் தமிழக அரசின் புதிய புதிய அறிவிப்புகளால் ஏற்கனவே நசுங்கி இருக்கும் லாரி உரிமையாளர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நிலை குலைந்து போயுள்ளனர்.

பல்வேறு விஷயங்களுக்கு அண்டை மாநிலத்தை சுட்டிக்காட்டும் தமிழக அரசு, காலாண்டு வரி அண்டை மாநிலங்கள் தள்ளுபடி செய்த நிலையில், தமிழக அரசு அப்பிரச்னை பற்றி துளியும் கவனம் செலுத்தாதது மோட்டார் துறையின் மேல் அரசுக்குதுளியும் அக்கறை இல்லை என்ற நிலையை காட்டுகிறது. இச்செயல்களால் மோட்டார் தொழில் கஷ்டத்திலிருந்து மீண்டு வருமா? இதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிலை காப்பாற்றப்படுமா? என்ற கவலையில் லாரி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* ஜிஎஸ்டியால் டயர் விலை அதிகரிப்பு
தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: மோட்டார் தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தொழில்கள் உள்ளன. அதை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். டயர் ரீட்ரேடிங் தொழில் லாரி உரிமையாளர்களின் நேரடி தொடர்புடைய தொழிலாகும். கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து இன்று வரை, சரியான லோடுகள் கிடைக்காமல் பல்வேறு இடர்பாடுகள் லாரிகளை இயக்க முடியாத சூழலில் ரீட்ரேடிங் டயர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தற்போது லாரிகள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், புதிய டயர்களின் விலை உயர்ந்துள்ளது. ரீட்ரேடிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் விலையும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் லாரி தொழில் நசிந்துள்ள நிலையில், விலை உயர்வை லாரி உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலையிலும், இத்தொழிலை செய்ய இயலாத நிலையிலும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆடம்பர பொருட்களுக்கு உண்டான ஜிஎஸ்டி வரி அதிகபட்சம் 28 சதவீதம். அத்தியாவசிய பொருட்களான போக்குவரத்து துறையில் பயன்படுத்தப்படும் புதிய டயர்களுக்கும், அதே ஜிஎஸ்டி வரியை நிர்ணயித்து இருப்பது என்னவென்றே புரியாத நிலை உள்ளது. டயருக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை குறைத்தால், டயர் விலை குறைய வாய்ப்புள்ளது. இது ஓரளவுக்காவது லாரி தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும். லாரித்தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளிக்கவேண்டும். இதன் மூலம் டயர் ரீட்ரேடிங் தொழிலை அழிவிலிருந்து காப்பாற்றுவதுடன், அது லாரி உரிமையாளர்களுக்கும் பக்கபலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : curfew loosening ,Corona ,owners ,road ,government ,Tamil Nadu , Corona curfew loosening and blinding owners: trucks paralyzed on the roadside; Will the Tamil Nadu government lend a hand?
× RELATED மயிலாடுதுறையில் சாலையில் சுற்றி...