×

பாலங்களை அழகுபடுத்த வீணாக்கப்படும் பல கோடி வரிப்பணம்: அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்த கோரிக்கை

சென்னையில் பாலங்களை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் பல கோடி வரிப்பணம் வீணாக்கப்படுவதாகவும், இதை தவிர்த்து விட்டு இந்த தொகையை அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி யில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகள் உள்ளது. சென்னையில் மொத்தம் 82 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகர்மயம் காரணமாக சென்னையில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இவ்வாறு மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று நகரமைப்பு வல்லுனர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக அடுத்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகை ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கு ஏற்ற வகையில் பொது போக்குவரத்து, சாலைகள், மழைநீர் வடிகால், வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் சென்னை மாநகராட்சி, நகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் பல கோடி ரூபாயை வீணடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக சென்னையில் உள்ள பாலங்களில் வெர்டிகல் கார்டன் அமைக்கிறோம் என்ற பெயரில் பல கோடிகள் வீணடிக்கப்பட்டு வருவதாக நகரமைப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 238 பாலங்கள், 14 மேம்பாலங்கள், 4 நடைமேம்பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள், 5 சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பாலங்களை சீரமைக்கவும் பாரமரிக்கவும் மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

இதில் குறிப்பாக ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பாலங்களில் வெர்டிகல் கார்டன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய இடங்களில் உள்ள பாலங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு வசதியுடன் வெர்டிகல் கார்டன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணி தேவையற்றது என்றும் இதனால் பல கோடி நிதிதான் வீணாகும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தால் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிதியை கொண்டு சென்னையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜி.என். செட்டி சாலையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்டுள்ள வெர்டிகல் கார்டன் பல மாதங்களாக முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இதில் உள்ள அனைத்து செடிகளும் வாடி போய் உள்ளது. பல இடங்களில் செடிகளே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி 10க்கும் மேறப்ட்ட பாலங்களில் இது போன்ற வெர்டிகல் கார்டன் அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த வெர்டிகல் கார்டன் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மேலும் இந்த திட்டத்தில் ஏன் ரூ.8 கோடி செலவு செய்ய வேண்டும் என்று நகரமைப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த நிதியை பொதுமக்கள் அடிப்படை வசதியை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னையில் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகளே இன்னும் முறையாக நிறைவேற்றபடாமல் உள்ளது. குறிப்பாக சென்னையில் புறநகர் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முறையாக சாலை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை. மழைநீர் வடிகால் வசதியும் முழுமையாக செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் இந்த பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே சென்னையில் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக ஆயிரக்கணக்கான நிதி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யாத மாநகராட்சி பாலங்களை அழகுபடுத்த கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே இது போன்ற செலவுகளை தவிர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் இது போன்ற அழகுபடுத்தும் பணியை செய்வதால் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : bridges , Billions of rupees wasted on beautifying bridges: demand for basic amenities
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...