தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் பேட்டி

சென்னை: “வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்து பேசினர். சந்திப்பின் போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயளாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பிறகு நாராயணசாமி அளித்த பேட்டி: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். புதுச்சேரி மாநிலத்தை எல்லாருக்கும் தெரியும். கடந்த நான்கரை ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளாக மத்தியில் இருக்கின்ற பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருக்கின்ற கிரண்பேடியும், புதுச்சேரி மாநிலத்தில் மாற்று ஆட்சி இருக்கின்ற காரணத்தால், ஆட்சி கவிழ்ப்பு வேலைகளை அவர்கள் செய்வதற்கு முனைந்து பாடுபட்டார்கள்.

அப்படி இருந்தாலும் கூட அதனை எல்லாம் முறியடித்து, நான்கரை ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் மிகச் செம்மையாக நாங்கள் செய்து வருகிறோம். கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது 94 சதவீதம் பேர் குணமடைந்து சென்று இருக்கிறார்கள். ஆனால் எங்கள் மாநிலத்தில் 98 சதவீதம் பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள். இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக இருக்கிறது. தினமும் பாதிப்பவர்கள் 1 சதவீதத்திற்கும் மேல் குறைவாக இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் அகில இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

மொத்தம் உள்ள 15 லட்சம் மக்கள் தொகையில் இதுவரை நான்கரை லட்சம் பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை செய்திருக்கிறோம். நிவர் புயல் வந்த நேரத்தில் கூட புதுச்சேரி மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வர உள்ள சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை எங்களுடைய தலைமையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இணைந்து எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக கூட்டணி மகத்தானவெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அதற்கு காரணம் அவரது கடின உழைப்பு. அவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பணி. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் கடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

* நடிகர் ரஜினி பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71வது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!. நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>