சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சென்னையில் மு.க.ஸ்டாலின் 20ம் தேதி ஆலோசனை: மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு அழைப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தொடர்பாக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர், பொறுப்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் வருகிற 20ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வர உள்ள தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று ஒவ்வொருவரும் சூளுரை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அவர் மண்டல வாரியாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக “தமிழகம் மீட்போம்” எனும் தலைப்பிலான “2021- சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்களில்” கலந்து கொண்டு பேசி வருகிறார். அப்போது தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை கட்சியினருக்கு அவர் வழங்கி வருகிறார்.

வெற்றி ஒன்றை குறிக்கோளாக கொண்டு பாடுபட வேண்டும் என்றும் அப்போது அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். அதே நேரத்தில் திமுக முன்னணியினர் மாநிலம் முழுவதும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த திமுக முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தொடர்பாக வருகிற 20ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகிற 20ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில், மாவட்ட மாநகர திமுக செயலாளர்கள்-ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். அதுபோது, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர், பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் என்ன மாதிரியாக தேர்தல் பிரசாரத்தை மக்களிடம் எடுத்து செல்வது, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு எவ்வாறு எடுத்துரைக்க வேண்டும் என்று அப்போது மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>