கோவளம் கடற்கரைக்கு சென்றபோது லாரி மீது பைக் மோதி கள்ளக்காதல் ஜோடி பலி

சென்னை: கோவளம் கடற்கரைக்கு சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியதில் கள்ளக்காதலர்கள் பரிதாபமாக இறந்தனர். காஞ்சிபுரம் அடுத்த மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (28). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தையுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் காகித பட்டறை பகுதியை சேர்ந்த துர்காதேவி (25) என்பவரும் வேலை பார்த்து வந்தார். துர்காதேவிக்கு திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்ததாலும், அருகருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், துர்காதேவி வேலூரில் உள்ள பூர்வீக வீட்டிற்கு செல்வதாகவும், தன்னுடன் துணைக்கு வருமாறும் வசந்தகுமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் வேலூர் வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம் சென்றுள்ளனர். நேற்று காலை இவர்கள் வாலாஜாபாத், வண்டலூர் வழியாக பைக்கில் கோவளம் சென்றுள்ளனர்.

கேளம்பாக்கம் அருகே சோனலூர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற கார் மற்றும் லாரிக்கு நடுவே முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, லாரியின் நடுவில் மோதியதால் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>