×

விஹாரி, பன்ட் சதம் விளாசல் இந்தியா வலுவான முன்னிலை

சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் 2வது இன்னிங்சில் ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் அசத்தல் சதம் காரணமாக இந்தியா லெவன் வலுவான முன்னிலை பெற்றது. இந்தியா லெவன் - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று களம் கண்ட இந்தியா லெவன் முதல் இன்னிங்சில் 194 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்னுக்கு சுருண்டது. 86 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை நேற்று தொடங்கிய இந்தியா லெவன், ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் எடுத்துள்ளது. பிரித்வி 3 ரன்னில் வெளியேற, மயாங்க் அகர்வால் 61, ஷூப்மன் கில் 65, கேப்டன் ரஹானே 38 ரன் எடுத்தனர். இடையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

சிறிது நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது. விஹாரி - பன்ட் இணைந்து 5வது விக்கெட்டுக்கு அதிரடியாக ரன் சேர்த்தனர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். 81 ரன் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்ட ரிஷப் முதல் பந்தில் ரன் எடுக்காவிட்டாலும், அடுத்த 4 பந்துகளில் 4, 4, 6, 4 என விளாசியதுடன் கடைசி பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி சதத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஓவரில் மட்டும் அவர் 22 ரன் குவித்தார். 2வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா லெவன் 4 விக்கெட் இழந்து 386 ரன் குவித்தது (90 ஓவர்). விஹாரி 104 ரன் (194 பந்து, 13 பவுண்டரி), பன்ட் 103 ரன்னுடன் (73 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் உள்ளனர். இந்தியா லெவன் 472 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி நாளான இன்று விரைவாக டிக்ளேர் செய்து வெற்றியை வசப்படுத்த முயற்சிக்கும்.


Tags : Vihari ,Vilasal India , Vihari, Punt hundred Vilasal India strong lead
× RELATED வாரணாசியில் தமன்னா படப்பிடிப்பு