×

நியூசி. வேகம் ஜேமிசன் அசத்தல் பாலோ ஆன் நெருக்கடியில் சிக்கியது வெஸ்ட் இண்டீஸ்

வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி பாலோ ஆன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவிதிருந்தது (84 ஓவர்). ஹென்றி நிக்கோல்ஸ் 117 ரன், கைல் ஜேமிசன் ஒரு ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜேமிசன் 20 ரன், அடுத்து வந்த டிம் சவுத்தீ 11 ரன் எடுத்து ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். நிகோல்ஸ் - வேக்னர் இணை 9வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. வேக்னர் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். டெஸ்ட் போட்டியில் இது அவருடைய முதல் அரைசதமாகும். நிகோல்ஸ் 174 ரன் (21 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சேஸ் பந்துவீச்சில் பிராத்வெய்ட் வசம் பிடிபட்டார்.

போல்ட் 6 ரன்னில் வெளியேற, நியூசி. முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்து ஆல் அவுட்டானது (114 ஓவர்). வேக்னர் 66 ரன்னுடன் (42 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல், ஜோசப் தலா 3 விக்கெட், சேஸ், அறிமுக வீரர் கெமார் ஹோல்டர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெ.இண்டீஸ் முதல் 2 ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் கிரெய்க் பிராத்வெய்ட் 3வது ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பிறகு நியூசி. வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெ.இண்டீஸ் வீரர்கள் பெவிலியன் நோக்கி அணி வகுப்பு நடத்தினர். முதல் டெஸ்ட்டை போலவே பொறுப்புடன் விளையாடிய பிளாக்வுட் அதிகபட்சமாக 69 ரன் எடுத்தார்.
2ம் நாள் ஆட்ட முடிவில் வெ.இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்துள்ளது (52 ஓவர்). அறிமுக வீரர்கள் ஜோஷ்வா டா சில்வா 2, கெமார் ஹோல்டர் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். துல்லியமாகப் பந்துவீசிய நியூசி. வீரர்கள் ஜேமிசன் 5 விக்கெட் (13-4-34-5), டிம் சவுத்தி 3 விக்கெட் அள்ளினர். கை வசம் 2 விக்கெட் மட்டுமே இருக்க, வெஸ்ட் இண்டீஸ் பாலோ ஆனை தவிர்க்கவே இன்னும் 137 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : crisis ,West Indies , Newsy. West Indies in crisis
× RELATED சில்லி பாயின்ட்…