×

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனர்: போராட்டம் 17வது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பரபரப்பு கருத்து

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்  மறுசீரமைப்பை பின்னுக்குத்தள்ளும் முயற்சிகளும் நடக்கின்றன எனவும் கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியின் எல்லைகளில் இன்றுடன் 17வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறுகையில், ‘விவசாய சட்டங்களின் சில விதிகளை திருத்துவதற்கான வரைவு திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளது.

இப்போது விவசாயிகள்தான் அதை முடிவு செய்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தேதியை தேர்வு செய்ய வேண்டும்’ என்றார். தொடர்ந்து அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘போராட்டத்தின் பின்னால் ஏதேனும் சக்தி இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். மீடியாவின் கண்கள் கூர்மையானவை. அதைக் கண்டுபிடிக்க உங்களிடமே விட்டுவிடுகிறோம். முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும். அரசாங்கத்தின் கதவுகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கும்’ என்றார். முன்னதாக திக்ரி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் உமர் காலித் மற்றும் சுதா பரத்வாஜ் போன்றோரை விடுதலை செய்ய வேண்டும் என்று சுவரொட்டிகள் வைத்து வலியுறுத்திய புகைப்படங்கள் வெளியானதை வைத்து அமைச்சர் பியூஸ் கோயல், விவசாயிகள் போராட்டத்தில் பின்னணியில் வேறு சக்திகள் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஆனால், அமைச்சரின் குற்றச்சாட்டுகளை விவசாய அமைப்பினர் மறுத்துள்ளனர். கடந்த 8ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் இன்று (டிச. 12) டெல்லியின் முக்கிய நுழைவு வாயில் சாலைகளை விவசாயிகள் முடக்கி வருகின்றனர். ஏற்கெனவே உத்திரப் பிரதேசம் - டெல்லி நுழைவு வாயிலையும், அரியானா - டெல்லி நுழைவு வாயிலையும் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக முடக்கியுள்ளனர். மேலும், சுங்கச்சாவடிகளை கைப்பற்றி அதில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதிக்கப்படும் என்று விவசாயிகள் அறிவித்ததால், இன்று உத்தரபிரதேசம் முழுவதும் டோல் பிளாசாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வண்டிக்கட்டுக்கொண்டு டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.

சுமார் 1,200 டிராக்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டுள்ளனர். சில இடங்களில் டோல் பிளாசாவை முற்றுகையிட்டு விவசாயிகள் கோஷமிட்டனர். அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு 24 மணி நேரமும் தயாராக உள்ளது.

மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் பிடியில் இருந்து போராட்டம் விடுதலையானால் வேளாண் சட்டங்கள் நாட்டு நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை விவசாயிகள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். அதற்கு பின்னரும் விவசாயிகளுக்கு எதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஒரு கருத்தை கூறிவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தை மேடையில் இருந்து வெளியேறுவதால் எந்த தீர்வும் எட்டப்படாது. இதன் மூலம் போராட்டம் விவசாயிகளின் கை மீறி சென்றுவிட்டது போன்று தெரிகிறது. பெரும்பாலான விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என எனக்கு நம்பிக்கை உள்ளது. சில விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் மீது சந்தேகங்கள் இருக்கலாம் அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என கூறினார்.


Tags : Union Minister ,Maoists ,struggle , Maoists infiltrate farmers' struggle: Union Minister's sensational comment as the struggle reaches its 17th day
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...