×

அணைக்கட்டு அருகே அதிகாலை லாரி கவிழ்ந்து விபத்து; கருங்கற்கள் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி: கடும் பனிப்பொழிவால் சோகம்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே இன்று அதிகாலை விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து கருங்கற்கள் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். கடும் பனிப்பொழிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தமிழகம் முழுவதும் கடந்த வாரம் நிவர் மற்றும் புரெவி புயல்களால் கடும் கனமழை பெய்து பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதமாகின. இருபுயல்கள் ஓய்ந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 9 மணி நீடிக்கும் பனியால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை உள்ளது. சாலைகளில் பனிப்பொழிவால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.

இருப்பினும் பல இடங்களில் விபத்துகள் நடந்து வருகிறது. இதேபோல் இன்று காலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் விபத்துகள் ஏற்பட்டது. இதுபற்றிய விவரம் :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்தீர்த்தம் அருகே உள்ள வி.கோட்டா பகுதியில் இருந்து கம்பிவேலிகளுக்கு பயன்படுத்தும் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நள்ளிரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூருக்கு புறப்பட்டது. டிரைவர் குப்புசாமி லாரியை ஓட்டினார். இவருடன் கிளீனர் மற்றும் தொழிலாளர்கள் என 5 பேர் உடன் வந்தனர். இதில் 3 தொழிலாளர்கள் கருங்கற்களுக்கு மேல்படுத்து உறங்கியபடி வந்தனர்.

கடுங்குளிர் என்பதால் அவர்கள் தார்ப்பாய் போர்த்தியபடி வந்ததாக தெரிகிறது. லாரி கேபினுக்குள் டிரைவர், கிளீனர் மற்றும் ஒரு தொழிலாளி இருந்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் அருகே உள்ள ஏரிக்கொல்லை பகுதி வழியாக இன்று அதிகாலை லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது கடும் பனிப்பொழிவால் பாதை தெரியாததால் வலதுபுற வளைவு பகுதியில் திருப்பாமல் நேராக லாரியை இயக்கியதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள பள்ளத்தில் இறங்கி சேற்றில் சிக்கி சாய்ந்தது. இதனால் லாரியின் மேல் படுத்திருந்த 3 தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். அதேநேரத்தில் அதில் அடுக்கி வைத்திருந்த கருங்கற்களும் மளமளவென அவர்கள் மீது சரிந்து விழுந்தது.

இதில் கற்களின் அடியில் சிக்கி ராமதீர்த்தம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜிலு (35), ராமன்(30), வரதப்பன்(30) ஆகிய மூவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த அணைக்கட்டு போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர்கள் மூவரும் கற்கள் சரிந்து என்ன நடக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் விபத்தில் 4 பேர் படுகாயம்
பெங்களூருவில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி ஒரு கார் வந்தது. இந்த காரில் உரிமையாளர் உட்பட ஒரு குழந்தை மற்றும் 2 பெண்கள் இருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள கோவிட் சோதனைச்சாவடியில் இன்று காலை வந்தது. அப்போது கடும் பனியால் பின்னால் வந்த மற்றொரு கார், 4 பேர் இருந்த கார் மீது மோதியது. இதில் 4 பேர் இருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் இருந்த சாலையில் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை கண்ட சோதனை சாவடி போலீசார், பொதுமக்கள் விபத்தில் சிக்கிய காரில் இருந்த 4 பேரையும் மீட்டனர். அதற்குள் தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், நெடுஞ்சாலைத்துறை போலீசாரும் அங்கு வந்து 4 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : dam ,Blacksmith , Early morning truck overturns near dam; Blacksmith kills 3 workers: Heavy snowfall
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...