×

குஜிலியம்பாறையில் வட்டார கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்வது எப்போது?.. 2 ஆண்டாக கிடப்பில் கிடக்கும் பணி; ஆசிரியர்கள் அதிருப்தி

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வட்டார கல்வி அலுவலக இடமாற்ற பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மீது ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 99 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியைகள் 301 பேர் பணிபுரிகின்றனர். இவர்களின் அலுவலக பணிகளுக்கான வட்டார கல்வி அலுவலகம் குஜிலியம்பாறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பழமையான இக்கட்டிடத்தில் பணிப்பதிவேடு, ஊதிய ஆவணங்கள், சேமநலநிதி கணக்குகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வாடகை தாராததால், உரிமையாளர் காலி செய்ய வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள கட்டிடத்திற்கு வட்டார கல்வி அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டாக இப்பணிகளை இழுத்தடிப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 தனித்தனி வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. இப்பள்ளியில் 23 மாணவர்கள், 24 மாணவிகள் என 47 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு 2 வகுப்பறை போதுமானது.

கூடுதலாக உள்ள வகுப்பறை கட்டிடத்தை மராமத்து பணிகள் செய்து, வட்டார கல்வி அலுவலகத்தை மாற்றியமைக்க வேண்டும் என வேடசந்தூர் அதிமுக எல்எல்ஏ பரமசிவத்திடம் கோரிக்கை விடுத்தோம். இதையேற்று கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு மராமத்து பணிகளை துவக்கிட குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு எம்.எல்.ஏ அறிவுறுத்தினார். ஓராண்டுக்கு முன்கட்டிடத்தில் தரைதளத்தில் டைல்ஸ் கற்கள் பதிப்பதற்காக பெயர்த்து விட்டு அப்படியே விட்டுச் சென்று விட்டனர். இதனால் கட்டிடத்தின் தரை தளம் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், இதுவரை மராமத்து பணிகள் துவங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

இது குறித்து ஒன்றிய அதிகாரிகளை கேட்டால், ப்ராசஸ்’ நடக்கிறது என கடந்த இரண்டு ஆண்டாக தட்டி கழிக்கின்றனர். எனவே, இது தொடர்பாக எம்.எல்.ஏ தலையீடு செய்து வட்டார கல்வி அலுவலகம் இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : Regional Education Office ,Teachers , When to relocate the Regional Education Office at Kujilyampara? .. Dormant work for 2 years; Teachers dissatisfied
× RELATED பாடாலூரில் ஆசிரியர்கள் 100 பேருக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி