எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல தற்போதைய நடிகர்கள் முதல்வராக முடியாது : அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து!!

மதுரை : நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சிக்கு அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் செல்ல மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதே சமயம் புதிய கட்சியை தொடங்குவதற்கான பணிகளை ரஜினி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தல்., கட்சி கொடி, சின்னம் என பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார். அதே சமயம் ரஜினியின் கட்சியில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இணையவுள்ளதாக அவரின் அண்ணன் சத்யநாராயணா கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையால் தமிழக அரசியலில் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை. அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் யாரும் ரஜினி கட்சிக்கு செல்ல மாட்டார்கள். நேற்றுவரை அறைக்குள் இருந்த நடிகர்கள் இன்று பொதுவெளிக்கு வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் எடப்பாடியார் அலை வீசுகிறது. தமிழக வாக்காளர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். மத்தியில், மாநிலத்தில் யார் ஆள வேண்டும் என தமிழக வாக்களர்களுக்கு நன்கு தெரியும்.தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போல தற்போதைய நடிகர்கள் முதல்வராக முடியாது. மக்களுக்காக உழைப்பவர்கள், பாடுபடுகிறவர்கள் மட்டுமே தமிழக அரசியலில் ஜொலிக்க முடியும். ” என்றார்.

Related Stories:

>