போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு : சீனா, பாக். மீது ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடத்துங்க! சிவசேனா மூத்த எம்பி கிண்டல்

புனே, : விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீது மத்திய அரசு ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் கிண்டலடித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாளுக்குநாள் வலுவடைந்து வரும் சூழலில், இதற்கு பின்னணியில் பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் ரோசாஹேப் தான்வே பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு விவசாயிகள் தரப்பிலும், எதிர்கட்சிகள் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

மத்திய அமைச்சர் ரோசாஹேப் தான்வேவுக்கு எதிராக சீக்கிய மதத்தின் மிக முக்கிய குழுக்களில் ஒன்றான டெல்லி குருத்வாரா மேலாண்மை குழு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மத்திய அமைச்சரின் கருத்தை சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு பின்னால் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இருப்பது உண்மை என்றால், அந்த இரண்டு நாடுகளின் மீது மத்திய அரசு ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ நடத்தவேண்டும். உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் தளபதிகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா அமைச்சர் ஓம்பிரகாஷ் பாபாராவ் கூறுகையில், ‘போராட்டத்தை கொச்சைப் படுத்திய மத்திய அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்து விவசாயிகள் அவரை அடிக்க வேண்டும்’ என்றார். இவ்வாறாக விவசாயிகளின் போராட்டம் அரசியல் கட்சிகள் மாறி மாறி விமர்சிக்கும் தளமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Related Stories:

>