×

வரும் 27ம் தேதி சனி பெயர்ச்சி விழா: தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்கால்: வரும் 27ம் தேதி சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 5.22 மணிக்கு (மார்கழி 12, சார்வரி வருடம்) சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலுருந்து இடம் பெயர்ந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி பெயர்ச்சி விழா திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர கோயிலில் சனீஸ்வர பகவான் சன்னதியில் நடைபெற உள்ளது. பக்தர்கள் அதிகமாக கூடும் நிகழ்வாக இருப்பதால், தற்போதைய கொரனா தொற்று காரணமாக, பாதுகாப்பான சனி பெயர்ச்சி திருவிழாவினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகின்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி பெயர்ச்சி தேதிகளில் தேவஸ்தான இணைய தளத்தில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். வரும் 19ம் (சனிக்கிழமை), 20ம் தேதி (ஞாயிறு), 26ம் தேதி (சனிக்கிழமை), 27ம் தேதி (ஞாயிறு-சனிபயார்ச்சி தினம்), ஜனவரி 2ம் தேதி (சனி), 3ம் தேதி (ஞாயிறு), 9ம் தேதி (சனி), 10ம் தேதி (ஞாயிறு), 16ம் தேதி (சனிக்கிழமை), 17ம் தேதி (ஞாயிறு), 23ம் தேதி (சனி), 24ம் தேதி (ஞாயிறு) தரிசனத்திற்கு அனைத்து பக்தர்கள் (இலவச தரிசனம், சிறப்பு / விரைவு நுழைவு உட்பட) தனித்தனியாக தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். (https://thirunallarutemple.org/sanipayarchi) மேலும், செல்லுபடியாகும் இ-டிக்கெட் மற்றும் ID கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் குளித்தல், புனித நீராடுதல் அல்லது மத சடங்குகள் நடத்த அனுமதி இல்லை. நகருக்கு உள்ளே வரும் அனைத்து பக்தர்கள் எப்போதும் முகக்கவசங்களை சரியாக அணியவும், தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தப்படுத்தவும், 6 அடி தூர இடைவெளியினை பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள், வெளியே, எல்லா நேரங்களிலும் முககவசங்கள் அணிய வேண்டும். பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தரிசனத்தின்போது சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்கள் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நுழைவு வாயில்களில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படும். சமீபத்தில் தொற்றுக்கு ஆளாகி அல்லது காய்ச்சல், இருமல், சுவாச அறிகுறிகள், வாசனை இழப்பு, சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ள எவரும் யாத்திரையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் யாத்திரையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வருகை தரும் அனைத்து பக்தர்கள் காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தும் அனைத்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags : shift ceremony ,Saturn ,Darbaranyeswarar temple , Saturn shift ceremony on the 27th: Arrangements are in full swing at Darbaranyeswarar temple
× RELATED சனி பிரதோஷ வழிபாடு