×

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; விஐபி பாஸ் கிடையாது

திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி வரும் ஜனவரி 4ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 25ம் தேதி அதிகாலை நடக்கிறது. விழாவையொட்டி கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆயிரங்கால் மண்டபத்தில் வண்ண அலங்கார பந்தல் பணிகள் முடிந்தது. தொடர்ந்து மணல்வெளியில் அலங்கார பணிகள் நடந்து வருகிறது.

மேலும் சக்கரத்தாழ்வார் சன்னதி உட்பட கோயில் முழுவதும் பக்தர்கள் வரிசையாக வந்து செல்ல வசதியாக பேரிகார்டு, தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் நெரிசலை தவிர்க்க மாநகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அம்மா மண்டபம் முதல் ராஜகோபுரம் வரை வடக்குவாசல், சாத்தார வீதி, சித்திரை வீதி, அடையவலஞ்சான் வீதி உள்ளிட்ட வீதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது சாலையோர உணவகத்தில் உபகரணங்களை அப்புறப்படுத்தினர். மேலும் வீதிகளில் இருந்த விளம்பர பலகைகள், பேனர்கள் அகற்றப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் சமீபத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

ஆனாலும் சொர்க்கவாசல் திறப்பன்று ஸ்ரீரங்கம் கோயிலில் விவிஐபி, விஐபி பாஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பாஸ் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் சொர்க்கவாசல் திறப்பன்று சுவாமிக்கு பட்டர்கள் பூஜைகள் நடத்தி பட்டர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் பக்தர்களின்றி அதிகாலை சொர்க்கவாசலை கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் காலை முதல் மாலை வரை சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டும், பக்தர்கள் கடந்து செல்ல அனுமதியும் அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

Tags : Removal ,occasion ,Srirangam ,Vaikunda Ekadasi ,No ,festival , Removal of occupations in Srirangam on the occasion of Vaikunda Ekadasi festival; No VIP pass
× RELATED போலீஸ்காரர் மீது தாக்குதல்: திருச்சியில் பரபரப்பு