×

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முன்னிலை: பூம்ரா அரை சதம்

சிட்னி: ஆஸ்திரேலியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் அணி முன்னிலை பெற்றது. இந்தியா - ஆஸி. மோதும் முதல் டெஸ்ட்  அடிலெய்டில் டிச.17ம் தேதி தொடங்குகிறது (பகல்/இரவு). அதற்கு முன்னோட்டமாக  ஆஸ்திரேலியா ஏ - இந்தியா லெவன் அணிகளுக்கு இடையே 3 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் கோஹ்லி, புஜாரா, அஷ்வின், குல்தீப், உமேஷ், ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆஸி அணியிலும் ஸ்மித், லாபுஷேன், கம்மின்ஸ், டிம் பெயின் என முக்கிய வீரர்கள் இல்லை. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியின்  தொடக்க வீரர் அகர்வால் 2 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா 40, ஷூப்மன் கில் 43 ரன் எடுத்தனர். விஹாரி 15, கேப்டன் ரஹானே 4,  ரிஷப் பன்ட் 5,  விருத்திமான் சாஹா 0,  சைனி 4, ஷமி (0) ஆகியோர் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். இந்தியா லெவன் 35.1 ஓவரில் 123 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து திணறிய நிலையில், அதிரடியாக விளையாடிய பூம்ரா அரைசதம் விளாசி அசத்தினார்.

சிராஜ் 22 ரன் எடுத்து ஸ்வெப்சன் பந்துவீச்சில் ஹாரிஸ் வசம் பிடிபட, இந்தியா லெவன் 48.3 ஓவரில் 194 ரன் எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது. பூம்ரா 55 ரன்னுடன் (57 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். பூம்ரா - சிராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸி. ஏ தரப்பில் அபாட், வைல்டர்மத் தலா 3, சதர்லேண்ட், கிரீன், ஸவெப்சன், கான்வே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து  32.2 ஓவரில் வெறும் 108 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியில்  அதிகபட்சமாக விக்கெட் கீப்பர்/கேப்டன் அலெக்ஸ் கேரி 32 ரன், மார்கஸ் ஹாரிஸ் 26 ரன்   எடுத்தனர். மேடின்சன் 19, வைல்டர்மத் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர் (4 பேட் டக் அவுட்). இந்தியா லெவன் தரப்பில் சிறப்பாகப்  பந்துவீசிய ஷமி, சைனி தலா 3, பூம்ரா 2, சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா லெவன் 86 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது.


Tags : India , India lead in training match: Boomera half-century
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!