நியூசிலாந்து ரன் குவிப்பு: ஹென்றி நிக்கோல்ஸ் அதிரடி சதம்

வெலிங்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஹென்றி நிக்கோல்சின் அதிரடி  சதத்தால் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்துள்ளது. நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் வேகப் பந்துவீச்சாளர் கெமார் ஹோல்டர் (22), விக்கெட் கீப்பர் ஜோஷுவா டா சில்வா (22) அறிமுகமாகினர். கேப்டன் லாதம், பிளண்டெல் இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். பிளண்டெல் 14 ரன் எடுத்து கேப்ரியல் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து லாதம்  27 ரன்னில்  வெளியேறினார்.  ராஸ் டெய்லர் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். வில்லியம் யங் -  ஹென்றி நிக்கோல்ஸ் இணை 4வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. யங் 43 ரன் எடுத்து கேப்ரியலின் விக்கெட் வேட்டையில் பலியானார்.

அடுத்து வந்த  ஜான் வாட்லிங் 30, டேரியல் மிட்செல் 42 ரன் சேர்த்து வெளியேறினர். இருவரும் ஹென்றியுடன் இணைந்து முறையே 5வது விக்கெட்டுக்கு 55 ரன், 6வது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. உறுதியுடன் விளையாடிய ஹென்றி தனது 6வது சதம் அடித்து அசத்தினார். முதல்நாள் முடிவில்  நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்துள்ளது (84 ஒவர்). ஹென்றி 117 ரன், கைல் ஜேமிசன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 3, கெமார் ஹோல்டர் 2, அல்ஜாரி ஜோசப் ஒரு விக்கெட் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

* வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பியதால் ஹென்றிக்கு நேற்று 3 ‘லைப்’ கிடைத்தது. இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர் சதம் விளாசி அசத்தினார்.

* வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டதால்  ஜான் வாட்லிங் அணியில் இடம் பிடித்தார்.

* வெ.இண்டீஸ் வீரர்  ஷான் கேப்ரியலுக்கு இது 50வது டெஸ்ட் போட்டி. அது மட்டுமல்ல யங் விக்கெட் அவருக்கு 150வது  டெஸ்ட் விக்கெட்டாகும். டெஸ்ட் போட்டிகளில்  150 விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கிறார் கேப்ரியல்.

Related Stories:

>