×

சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ எங்கே? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம் இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ல் சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 400.47 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய கனிமம் மற்றும் உலோக வணிக கழகத்தின் அதிகாரிகளின் தயவில் சுரானா நிறுவனம் விதிகளுக்கு முரணாக தங்கத்தை இறக்குமதி ெசய்தது தெரியவந்தது.   இதையடுத்து, சுரானா நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்திற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.   இந்த நிலையில் தேசிய கம்பெனி லா போர்டு சென்னையை சேர்ந்த சி.ராமசுப்பிரமணியன் என்பவரை சுரானா நிறுவனத்தின் சொத்துக்களுக்கு நிர்வாகியாக அறிவித்தது.  இதையடுத்து, ராமசுப்பிரமணியன் சுரானா நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கத்தை திரும்ப தருமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் தங்கத்தை திரும்ப தர சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி ராமசுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் சீனிவாசன், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது சுரானா நிறுவனத்தில் உள்ள எடை மிஷினில்தான் எடைபோடப்பட்டது. தவறுதலாக 400.47 கிலோ என்று பதிவு செய்யப்பட்டது என்றார்.  வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:   தனி சாட்சி முன்பு எடை பார்க்கப்பட்டு லாக்கரில் சீல் வைத்த நிலையில் எப்படி எடை குறையும். சொத்து பாதுகாப்பு அறையில் சொத்துக்கள் காணாமல்போனால் சிபிஐ என்ன செய்ய வேண்டும். தனி வழக்கு பதிவு செய்யவேண்டுமல்லவா? விசாரணை முடிவில் விசாரணை அதிகாரி 296.606 கிலோதான் இருந்தது தவறாக 400.47 கிலோ என்று பதிவிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இது தொடர்பாக புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வக்கீல் தெரிவித்துள்ளார். அது குறித்து அண்டை மாநிலத்தில் உள்ள சிபிஐ அல்லது தேசிய விசாரணை ஏஜென்சி விசாரணைக்கு மாற்றலாம் என்று இந்த நீதிமன்றம் கருத்து தெரிவிக்கிறது.

103.606 கிலோ தங்கம் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மைதானா? தங்கம் குறைந்துள்ளது என்று சுரானா தரப்பு கூறியபிறகு சிபிஐ 296.606 கிலோதான் என்று கூறுவதிலிருந்து இதில் சிபிஐ அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கிறதா? சுரானா நிறுவனத்துடன் சிபிஐ அதிகாரிகள் கூட்டு சேர்ந்து பறிமுதல் செய்யப்பட்டபிறகு கூடுதலாக 100 கிலோவை சேர்த்துள்ளனரா?  இந்த கேள்விகள், வாய்ப்புகள் குறித்து இந்த நீதிமன்றம் கருத்து சொல்ல விரும்பவில்லை. விசாரணையில் உண்மை வெளி வரவேண்டும். எனவே, மனுதாரர் சம்பவம் குறித்து முழுவதுமாக மனுவாக சென்னை சிபிசிஐடியிடம் தரவேண்டும்.

அந்த மனுவின் அடிப்படையில் சிபிசிஐடி திருட்டு வழக்கு பதிவு செய்து எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியால் விசாரணை நடத்த வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் உதவ வேண்டும். இந்த விசாரணை 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் நகலை தேசிய கம்பெனி லா போர்டு நியமித்துள்ள மனுதாரரிடம் கொடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளுடன் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : CBI ,ICC , Where is 103 kg of gold seized by CBI? ICC action order for CPCIT inquiry
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...