×

வடக்குச்சத்திரம் - தென்மலை சாலையில் கருவேல முள்செடிகளால் பயணிகளுக்கு ஆபத்து: அகற்ற கோரிக்கை

சிவகிரி: சிவகிரி அருகேயுள்ள வடக்குச்சத்திரத்தில் இருந்து தென்மலை வரை 5 கி.மீ. தூரம் உள்ள சாலையின் இருபுறமும் ஆபத்தை ஏற்படுத்தும் கருவேல முள்மரங்கள் உள்ளதை அப்பறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து சங்கரன்கோவில் செல்வதற்கு விசுவநாதப்பேரி, வடக்குச்சத்திரம், தெற்குசத்திரம், வடுகப்பட்டி, தென்மலை, பருவக்குடி, கரிவலம்வந்தநல்லூர் வழியாக சாலை உள்ளது. இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், கலிங்கப்பட்டி, திருவேங்கடம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முறம்பு பகுதிக்கு செல்வதற்கு நீண்டகாலமாகப்  பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.

 பயண தூரத்தை குறைத்து எரிபொருட்செலவை மிச்சப்படுத்தும் வகையில் குறுக்கு வழியாக சிவகிரி-பருவக்குடி சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலையில் வடக்குச்சத்திரத்தில் இருந்து தென்மலை இடையேயுள்ள 5 கி.மீ.தூரம் சாலையின் இருபுறமும் கருவேலமுள் மரங்கள் உள்ளன. இச்சாலையில் செல்லும் வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளை முள்மரங்கள் பதம் பார்த்து விடுகின்றன. இதனால் பேருந்துகளில் சன்னல் ஓரமாக இருந்து பயணம் செய்யும் பயணிகள் காயம் அடையும் நிலை நீடித்து வருகிறது.

மேலும் சிறிய வளைவில் கூட எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முள் மரங்களின் ஆக்கிரமிப்பு இருப்பதால் வாகன விபத்து ஏற்படும் ஆபத்தும் தொடர்கிறது. எனவே வடக்குச்சத்திரம்-தென்மலை சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேல முள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : travelers ,Vadakkuchatram-Thenmalai ,removal ,road , Danger to travelers due to oak thorns on Vadakkuchatram-Thenmalai road: Demand for removal
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...