×

கடல்சார் துறையில் மிகப் பெரிய மாற்றம்: துறைமுக வரைவு மசோதா குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!!!

டெல்லி: துறைமுக வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து  அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய துறைமுகங்கள்  சட்டம், 1908க்கு  மாற்றாக தயாரிக்கப்பட்ட இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள்  ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்திய கடலோரப் பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதற்காக, துறைமுகத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், துறைமுகங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தவும்  இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதா துறைமுகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், செயல்படாத நிலையில் உள்ள துறைமுகங்களை மீண்டும் பயன்படுத்தவும் வழி செய்யும். கடல்சார் துறையில்  அதிக முதலீட்டையும், புதிய துறைமுகங்கள் உருவாகவும், தற்போதுள்ள துறைமுகங்களின் மேம்பாட்டையும் இந்த மசோதா உறுதி செய்யும்.

இந்த மசோதா, பின்வரும் பரந்த முறைகள் மூலம் இந்தியாவில் துறைமுகத் துறையின் வளர்ச்சிக்கும், நிலையான வளர்ச்சிக்கும் உதவும் சூழலை உருவாக்க முயல்கிறது:

*  கடல்சார் துறைமுக ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தல்

* கடலோர மாநில அரசுகள், மாநில கடல்சார் வாரியங்கள் மற்றும் இதர கடல்சார் தரப்பினருடன் ஆலோசித்து தேசிய துறைமுகக் கொள்கை மற்றும் தேசிய துறைமுகத் திட்டம்  உருவாக்கப்படும்.

* கடல்சார் தொழில் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண, கடல்சார் துறைமுகத் தீர்ப்பாயம் மற்றும் கடல்சார் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைத்தல்.

இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள புது விதிகள், துறைமுகங்களின் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, தரமான செயல்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும். இந்திய  கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில், பொதுத் துறை மற்றும் தனியார் முதலீடுகளை இந்த மசோதா அதிகரிக்கச் செய்யும். எளிதாக தொழில் செய்யும் சூழலை அதிகரித்து,  மத்திய அரசின் தற்சார்பு இந்தியா நடவடிக்கைகளுக்கு இந்த மசோதா உந்துதல் அளிக்கும்.

‘‘இந்த மசோதா இந்திய கடல்சார் துறையில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும்’’ என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை  இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறினார். இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா-2020 பொது மக்கள் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதாவை  http://shipmin.gov.in/sites/default/files/IPAbill.pdf என்ற இணைப்பில் காணலாம் என்றும் இந்த வரைவு மசோதா குறித்து, மக்கள் தங்கள்  ஆலோசனைகளை sagar.mala@nic.in   என்ற இ-மெயில் முகவரிக்கு, டிசம்பர் 24ம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : public ,Federal Government , Biggest change in the maritime sector: Federal Government instructs the public to comment on the Port Draft Bill. !!!
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...