டெல்லி: கவிஞர் பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பாரதி திருவிழாவில் டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். சுப்ரமணிய பாரதிக்கு அவரது பிறந்த நாளன்று மரியாதை செலுத்துகிறேன். சர்வதேச பாரதி திருவிழாவில் பங்கேற்பதில் பெருமகிழச்சி அடைகிறேன்.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பல்துறை வித்தகராக அவர் திகழ்ந்தார். அவரது பணி, தத்துவங்கள், வாழ்க்கை குறித்து ஒருவர் ஆச்சரியம் மட்டுமே பட முடியும் என்றார். அச்சமில்லை..அச்சமில்லை..அச்சமென்பதில்லையே என்ற என்ற பாரதி வரிகளை மேற்கொள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி வரிகளை எடுத்துக்காட்டினார். நவீன இந்தியாவில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பாரதியார் பாடியுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். சுதந்திரமான, அதிகாரமுடைய பெண்கள் பாரதியின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாக இருந்தனர்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன் பெண்கள் விளங்கவேண்டும் என்று அவர் எழுதினார். அவரது லட்சியத்தால் ஊக்கம் பெற்று, பெண்கள் தலைமையிலான அதிகாரமளித்தலை உறுதிசெய்ய நாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். புதிய இந்தியாவின் மகளிர் சக்திக்கான காலமிது என்றார். வாரணாசிக்கும்-பாரதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார். பிரிவினை இருந்தால் அந்த சமூகம் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை நன்கு தெரிந்து பாரதி வைத்திருந்தார். பாரதியாரின் புத்தகங்களை நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம் என்றார் பாரதி. பாரதியாரின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கிறேன். இன்றை இளைஞர்கள் பாரதியாரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். பாரதியாரை எவ்வாறு வரையறை செய்வது என்ற கருவி மிகவும் சவாலானது. வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்தவர் பாரதியார் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார். சுப்ரமணிய பாரதிக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று கூறியவர் அவர்.
மனிதகுலத்துக்கு புதுமைகளை வழங்கும் இன்றைய இளைஞர்களிடம் அவரது உணர்வை நான் காண்கிறேன். நமது நாட்டுக்கும், உலகத்துக்கும் இது பெருமைகளை தேடித்தரும் என்றார். எதிர்காலத்தை பற்றி சிந்தித்த பாரதி அடித்தட்டு மக்களுடன் தொடர்பில் இருந்தார். கலாச்சாரம், பாரம்பரியம் & கடந்த காலத்தின் சிறப்புகள் குறித்த பாடல்களை இயற்றினார். கடந்த காலத்திலேயே வாழ்ந்து விட கூடாது, அறிவியல் ஆர்வத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பாரதி கூறினார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.