அம்மா உணவகத் திட்டத்திற்கு முன்னோடியாக செயல்பட்ட கோவை சுப்ரமணியம் காலமானார்: ஊடகத்திற்கு தெரியாமல் ஏழைகளுக்கு வாரி வழங்கியவர்!!

கோவை, : கோவையில் உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்த சாந்தி சோஷியல் சர்வீஸ் தலைவர் சுப்ரமணியம் இன்று காலமானார். இதனால் கோவை பொதுமக்கள் சோகமடைந்துள்ளனர்.கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் சேர்மன் சுப்ரமணியம்(78).இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 72ம் ஆண்டு துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பல்வேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார்.

பின்னர், கடந்த 96ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்ரமணியம் இருந்து வருகின்றார். சமீபத்தில் சாந்தி கியர்ஸ் நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது. சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்ரமணியம் கவனித்து வந்தார். இதன் மூலம் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். ரூ.20க்கு சாப்பாடு உள்ளிட்ட மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய். மருத்தகங்களில் 30 சதவீதம் சலுகை விலையில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில் ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும். சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னை விளம்பரப்படுத்திக் ெகாள்ள மாட்டேன், ஊடகங்களில் முகத்தை காட்ட மாட்டேன் என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் சுப்ரமணியம். இந்நிலையில், 78 வயதான சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்ரமணியம் உயிரிழந்தார். இவரின் மறைவு பொதுமக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>