×

ஐஎஸ்எல் கால்பந்து மோகன்பெகானை சமாளிக்குமா ஐதராபாத்?

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு படோர்டா நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் ஐதராபாத் அணி, மோகன்பெகானை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள ஏடிகே மோகன்பெகான் அணி, அவற்றில் 3 போட்டியில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது. ஐதராபாத் அணி இதுவரை 3 போட்டிகளில் ஆடி, ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இத்தொடரில் 3 போட்டிகளில் வென்றிருந்தாலும், முந்தைய போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியிடம், எதிர்பாராத விதமாக மோகன்பெகான் அணி தோல்வியடைந்தது. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற முனைப்பில் இன்று மோகன்பெகான் அணி களமிறங்க உள்ளது. மோகன்பெகான் அணியின் முன்கள வீரர் ராய் கிருஷ்ணா நல்ல ஃபார்மில் ஆடிக் கொண்டிருக்கிறார். இதுவரை நடந்த போட்டிகளில் மோகன்பெகான், மொத்தமாக 5 கோல்களை அடித்துள்ளது. அவற்றில் 4 கோல்களை ராய் கிருஷ்ணா அடித்துள்ளார்

அணியின் பயிற்சியாளர் அன்டோனியோ கூறுகையில், ‘‘தங்கியுள்ள ஓட்டலில் இருந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அணியின் வீரர்கள் களைப்படைந்து விடுகின்றனர். இந்த பயணத்தால் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இது தவிர்க்க முடியாததுதான். வேறு தீர்வு இல்லை’’ என்று தெரிவித்துள்ளார். முன்களத்தில் ராய் கிருஷ்ணாவுக்கு டேவிட் வில்லியம்ஸ் நன்கு கை கொடுக்கிறார். இருவரும் பந்தை மின்னல் வேக பரிமாற்றங்களின் மூலம் கோல் போஸ்டுக்கு கடத்தி சென்று, எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். தடுப்பாட்டத்தில் சந்தேஷ் ஜிங்கானும், சுபாஷிஸ் போஸ் மற்றும் ஜோஸ் லூயிஸ் ஆகியோர் ஜொலிக்கிறார்கள்.

ஐதராபாத் அணியில் முன்கள வீரர்கள் ஜோயல் சையானிசும், அரிடேன் சன்டானவும் துடிப்பாக ஆடுகிறார்கள். ஒரு வெற்றி, 2 டிரா என நடப்பு தொடரில் தோல்வியை காணாமல் உள்ளது இந்த அணி. இன்றைய போட்டியிலும் தோல்வியை தவிர்க்கும் வண்ணம், தற்காப்பு ஆட்டத்தையே ஐதராபாத் அணி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ட் பெங்கால்- ஜாம்ஷெட்பூர் டிரா

திலக் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. இப்போட்டியில் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.ஈஸ்ட் பெங்கால் அணியின் முன்கள வீரர் ஈகனேசன் லிங்டோ, ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் 2வது மஞ்சள் அட்டையை பெற்றதால், வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி, 10 வீரர்களுடன் ஆடியது. இருப்பினும் மற்றொரு ஹீரோவான மொகமது இர்ஷாத், ஜாம்ஷெட்பூரின் தாக்குதல்களை சிறப்பாக எதிர்கொண்டு, கோல் ஏதும் விழாமல் பார்த்து கொண்டார்.

பெங்கால் அணியின் பயிற்சியாளர் ராபி பௌலர் கூறுகையில், ‘‘லிங்டோவுக்கு 2வது மஞ்சள் அட்டை கொடுத்தது நியாயமில்லை. நடுவர் பணியில் சர்வதேச தரம் இல்லை. இது தொடர்பாக போட்டி நிர்வாகிகளிடம் முறையிட்டும் பலனில்லை’’ என்று வருத்தம் தெரிவித்தார். இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி, அவற்றில் 3 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்றைய டிராவின் மூலம் நடப்பு தொடரில் முதன் முதலாக அந்த அணி புள்ளி கணக்கை துவக்கியுள்ளது.

Tags : Hyderabad ,ISL ,Mohenjo-daro , Will Hyderabad tackle ISL football Mohenjo-daro?
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!