புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும்: நடராஜன் இனிதான் கவனமா இருக்கவேண்டும்...அதிரடி வீரர் சேவாக் அட்வைஸ்

புதுடெல்லி: நடராஜன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இனிதான் அவருக்கு சிக்கலே என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது பந்துவீச்சு திறனால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னாள், இன்னாள் வீரர்கள் அவர் புகழ்பாடுகின்றனர். இந்நிலையில் நடராஜனை ஐபிஎல் தொடருக்குள் கொண்டு வந்ததில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கிற்கு முக்கிய பங்கு உள்ளது.

பஞ்சாப் அணியில் 2017ல் நடராஜன் சேருவதற்கு சேவாக்தான் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் நடராஜனுக்கு தொடர் ஆலோசனைகளை வழங்கி வரும் சேவாக், முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில், நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். மிக வேகமாக முன்னேறி வருகிறார். அவர் வேகமாக முன்னேற முன்னேற அவருக்கு பிரச்னையும் அதிகரிக்கும். நடராஜன் அதற்கு தயாராக இருக்கவேண்டும். அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். தொடர்ந்து அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு அவர் சவாலான வீரராக தொடர முடியும்.

எதிர்வரும் நாட்களில் இவரது பந்துவீச்சு எப்படி என்று மற்ற வீரர்களுக்கு புரியும். அப்போதுதான் சிக்கல் வரும். நடராஜன் எப்படி போடுவார், எப்படி பவுலிங் செய்வார் என்று எதிரணிக்கு தெரிந்துவிடும். அப்போதுதான் அவரது பந்துவீச்சை பதம்பார்க்க துடிப்பர். அதனால் அதற்குள் நடராஜன் பல புதிய விஷயங்களை கற்று, தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். புதிய புதிய திட்டங்களை வகுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நிலைக்க முடியும். ஜாகீர்கான், நெஹ்ரா போன்ற இடது கை பந்துவீச்சாளர்கள் உடன் நடராஜன் நேரம் செலவழிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், பந்துவீச்சு நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். இதன் மூலம் நடராஜன் புதிய விஷயங்களை கற்க முடியும். ஜாகீர் கான், நெஹ்ரா போன்றவர்கள் கற்றுக்கொண்ட விஷயம் நடராஜனுக்கு சிறந்த பாடமாக அமையும். இவ்வாறு சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>