×

கொரோனா தொற்று எதிரொலி ஜல்லிக்கட்டு நடக்குமா.. நடக்காதா..?காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் எதிர்பார்ப்பு

அலங்காநல்லூர் :  கொரோனா தொற்று காரணமாக வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா என காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தளர்வு என்று அரசு நடைமுறைகளை தளர்த்தி திருமணம், கோயில் திருவிழா என குறிப்பிட்ட அளவில் மக்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ல் பாலமேட்டிலும், 17ல் அலங்காநல்லூரிலும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்குமா என விழா கமிட்டியாளர்கள் மட்டுமின்றி காளை வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நன்கொடை பாதிக்கும் அபாயம்

பொதுவாக அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை காண மதுரை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவர். லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தங்களது பொருட்களுக்கான விளம்பர யுக்தியாக நிகழ்வை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வந்தது.

ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கும் முன்பாகவே கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், டூவீலர், கார், காளை மாடு, நாட்டு பசு மாடு என தங்களது கம்பெனி விளம்பரங்களுக்காக போட்டி போட்டு கொண்டு பணமாகவும், பொருளாகவும் தொழிலதிபர்கள் வாரி வழங்குவர். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு, நோய் தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உற்பத்தி பாதிப்பு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வீரியம் குறைந்த பின்னும் இன்னும் பல நிறுவனங்கள் தங்களது பழைய நிலைக்கு வர முடியாமல் நிதிநெருக்கடியில் தத்தளிக்கின்றன.  இதனால் இந்த ஆண்டு வழக்கம்போல் ஜல்லிக்கட்டிற்கு நன்கொடையாளர்கள் உதவி செய்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தொடரும் குளறுபடிகள்

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து காளைகள், வீரர்கள் பதிவில் அதிகாரிகளால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. வழக்கமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் காலை  8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்துவதற்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்ற ஒரு அலுவலர் முன்பு நேரடியாக நடத்தி வந்தனர். ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வில் அதிகபட்சமாக 500 முதல் 600 காளைகள் வரை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவிழ்க்க முடியும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு விழா கமிட்டி ஏற்பட்டாளர்கள், காவல்துறை, வருவாய் துறை என ஆளுக்கொரு அனுமதியாக 1000க்கும் மேற்பட்ட காளைகளுக்கும், 2000க்கும் மேற்பட்ட வீரர்களுக்கும் அனுமதி அட்டையினை வாரி வழங்கி தேவைக்கு அதிகமான கூட்டத்தை கூட்டி விட்டனர். இதனால் ஏற்பட்ட குளறுபடியில் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஒரு மணிநேரத்திற்கு 80 காளைகள்

ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வில் எத்தனை காளைகள் பங்கேற்க வேண்டும், அதற்காக எத்தனை வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்படுவார் என்பதை மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் வருவாய்த்துறை முன்கூட்டியே ஜல்லிக்கட்டு கமிட்டியாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் .குறிப்பிட்ட அளவில் காளைகளையும், மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு காலத்திற்குள் அனுமதிப்பதன் மூலம் தேவையற்ற அலைக்கழிப்புகள், கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஒரு மணி நேரத்திற்கு 75 முதல் 80 காளைகளே பங்கு பெற முடியும். அதேபோல் ஒவ்வொரு சுற்றுக்கும் வீரர்களுக்கு அனுமதி 75 நபர்கள் என்று நிர்ணயம் செய்து அனுமதி வழங்கலாம். இதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என காளை வளர்ப்பவர்கள்,  மாடுபிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் கோவிந்த், ரகுபதியிடம் கேட்ட போது கூறியதாவது: கோயில் திருவிழா, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு எவ்வாறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வழங்கியதோ அதேபோல், தொன்றுதொட்டு நடைபெறும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கும் அனுமதி வழங்க வேண்டும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காளை வளர்ப்பவர்கள்,  மாடுபிடி வீரர்களை குறைந்தளவில் பங்கேற்று ஜல்லிக்கட்டு திருவிழாவை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடத்திட மாவட்ட நிர்வாகத்திற்கும், ஜல்லிக்கட்டு நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும், அதேபோல் அதிகளவில் காளைகள் பதிவையும், வீரர்கள் பதிவையும் தவிர்த்து குறிப்பிட்ட அளவில் தேவையான நேரத்திற்குள் பங்கேற்கக்கூடிய அளவில் காளைகளுக்கும் வீரர்களுக்கும் அனுமதிகளை வழங்கிட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’ என்றனர்.


Tags : Corona ,cowherds ,Bull breeders , Alankanallur: Bull breeders are wondering whether permission will be granted for jallikkattu in Alankanallur, Palamet in January 2021 due to corona infection.
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...