×

வேலூர் சதுப்பேரிக்கு செல்லும் வழியில் பொய்கையில் தூர்ந்துபோன கால்வாயால் மீண்டும் பாலாற்றுக்கே திரும்பும் வெள்ளம்-கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்:  தூர்வாரப்படாததால் வேலூர் சதுப்பேரிக்கான நீர்வரத்துக்கால்வாயில் திருப்பி விடப்பட்ட வெள்ளம் பொய்கையில் மீண்டும் பாலாற்றிலேயே கலந்து வருகிறது. இதில் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிவர், புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழக்கத்தைவிட அதிகளவில் மழையை பெற்றுள்ளன. இதனால் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை அணை, மோர்தானா அணை, ராஜாதோப்பு அணை, பொன்னை அணைக்கட்டுகளில் மோர்தானா அணையும், ஆண்டியப்பனூர் ஓடை அணையும் நிரம்பியுள்ளன.

அதேபோல் ஆந்திர மாநிலம் கலவகுண்ட அணை நிரம்பியதால் அங்கிருந்து திறந்துவிடப்படும் நீரும் பொன்னை அணைக்கட்டை நிரப்பி பாலாற்றில் வந்து சேருகிறது. இதனால் மூன்று மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 137 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளன.
பெரிய ஏரிகளான காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, உதயேந்திரம், சதுப்பேரி உட்பட 44 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் அரைகுறையாக நீர் நிரம்பியும், நீர் நிரம்பாமல் வறண்ட நிலையிலும் காட்சி அளிக்கின்றன. இதற்கு வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்படாததும் காரணமாக கூறப்படுகிறது.
 
இதில் சதுப்பேரிக்கான நீர்வரத்துக்கால்வாய் விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து பொய்கை கடப்பேரி, அன்பூண்டி வழியாக சதுப்பேரியை அடைகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையிலும் பாலாற்று நீர் இக்கால்வாயில் வரவில்லை என்றும், புதர்கள் மண்டி தூர்ந்து போயிருந்ததும் காரணம் என்றும் புகார் எழுந்தது.

அப்போதைய எம்எல்ஏ கலையரசு, அக்கால்வாயை விரிஞ்சிபுரம் பகுதியில் தூர்வாரி வழியேற்படுத்தினார்.
அதன்பிறகும் சரியாக பராமரிக்கப்படாத நிலையில் சமீபத்தில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து நீர் வரும் பாதையை தூர்வாரி சீரமைப்புப்பணியை மேற்கொண்டார். இதையடுத்து சதுப்பேரிக்கு தற்போதைய பாலாற்று வெள்ளம் வருவதற்கு இருந்த தடை நீங்கியது. தற்போது சதுப்பேரிக்கு பாலாற்றில் இருந்து நீர் வந்து கொண்டுள்ளது.

ஆனால் பொய்கை பாடசாலை தெரு பகுதியில் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் வெள்ளம் சீராக செல்ல முடியாமல் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீர்வரத்துக்கால்வாயில் வரும் தண்ணீரில் 30 சதவீதம் மட்டுமே சதுப்பேரிக்கு செல்வதாகவும், 70 சதவீதம் தண்ணீர் கால்வாய் நிரம்பி வெளியேறும் கலங்கல் வழியாக மீண்டும் பாலாற்றில் சென்று கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, தற்போதாவது மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு சதுப்பேரிக்கான நீர்வரத்துக்கால்வாயை முழுமையாக தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பாலாற்று நீர் முழுவதும் கடப்பேரி, பெரியேரி, அன்பூண்டி ஏரிகளை நிரப்பி சதுப்பேரியையும் நிரப்பும் வழியை ஏற்படுத்த முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,swamp ,Vellore , Vellore: The diversion of water to the Vellore swamp canal due to non-discharge has re-entered the lake.
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...